சேலம், மே 31:
சேலம் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய சோதனையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மால்டோடெக்ஸ்ரீன் பவுடர் கலந்த பால் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனையில் பிடிபட்ட ஈரோடு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6500 லிட்டர் பால் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இளங்கோவன், சந்திரசேகரன், சிங்காரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் தாரமங்கலம், மேட்டூர், ஜலகண்டாபுரம், சங்ககிரி, ஓமலூர் ரோடுகளில் உள்ள பால் கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது பால் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து கால், அரை, ஒரு லிட்டர் என பாலிதீன் கவரில் வைத்து விற்பனை செய்து வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 20 லிட்டர் பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.
இச்சோதனையின்போது அவ்வழியாக பால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி அதிகாரிகள் கைகாட்டி நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை துரத்தி சென்று, தாரமங்கலம் அடுத்த தொட்டம்பட்டி ரோட்டில் மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லாரி ஈரோட்டில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியில் இருந்த பாலை பறிமுதல் செய்து, சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கலப்பட பால் விற்பனை செய்வது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து பால் கடைகளில் சோதனை நடத்தினோம். இதில் பாலில் அடர்த்தியை கொண்டு வர மால்ட்டோ டெக்ஸ்ரீன் என்ற பவுடர் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த பவுடர் அதிகமாக பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுபவை. இதை பாலில் கலப்பது மூலம் அதன் அடர்த்தி அதிகரிக்கும். குளுக்கோஸ் சுவையை ஏற்படுத்தும். கலப்படம் செய்யப்பட்ட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. சோதனைக்காக பல்வேறு இடங்களில் 2 லிட்டர் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
40 லிட்டர் பாலில் மால்ட்டோ டெக்ஸ்ரீன் 100 கிராம் கலக்கப்படுகிறது. இந்த பாலை அருந்தும்போது சிலருக்கு வாந்தி, பேதி ஏற்படும். பவுடர் அதிகளவில் கலந்ததால் தொடர் பேதி ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும் இனிமேல் பாலிதீன் கவரில் பாலை விற்பனை செய்யக்கூடாது என்று பால் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை நடந்து கொண்டு இருந்தபோது அவ்வழியாக தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி சென்றது.
அந்த லாரியை மடக்கி பறிமுதல் செய்தோம். ஈரோட்டை சேர்ந்த தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. லாரியில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 160 கேன்களில், மொத்தம் 6500 லிட்டர் பால் இருந்தது. அந்த பாலில் சோதனைக்காக இரண்டு லிட்டர் எடுத்துக்கொண்டு, லாரியை அனுப்பி வைத்துவிட்டோம். சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி பால் சோதனைக்காக சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. .
இரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பாலில் வேறு ஏதும் கலப்படம் செய்து உள்ளார்களா? என்பது குறித்து 14 நாட்களில் தெரியவரும். அவ்வாறு பாலில் வேறு ரசாயன பொருள் கலப்படம் செய்து இருப்பது தெரிய வந்ததால், அந்த நிறுவனத்தின் மீதும், பால் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.
பீர் தயாரிப்பில் மால்டோடெக்ஸ்ரீன்
மக்களாசோளம், சோயா, கோதுமை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மாவு பொருள். அடர்த்தியை அதிகரிப்பதோடு சுவையூட்டும் தன்மை இருப்பதால் பேக்கரி பொருட்கள், உணவு பொருட்கள் தயாரிப்பில் மட்டுமின்றி மதுவிலும் கலக்கப்படுகிறது. குறிப்பாக பீர் தயாரிப்பில் மால்டோடெக்ஸ்ரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. பீர் ருசியை ஊட்டுவதே மாட்டோடெக்ஸ்ரீன் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment