சென்னை, ஜூன் 1:
பல்லாவரம் நகராட்சி எல்லையில் உள்ள பழக்கடைகளில், விவசாயிகள் தங்கள் மரங்களில் விளைந்த மாங்காய்களை விற்பனை செய்கின்றனர். அவற்றை உடனடியாக பழுக்க வைக்க கடைக்காரர்கள் கால்சியம் கார்பைடு கல் பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்று கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்டால் அஜீரணம், வயிறு உப்பிசம், வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும். இந்த பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி பழக்கடைகளில் கார்பைடு மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்லாவரம் வேலவன், தாம்பரம் மணிகண்டன், மறைமலைநகர் பாலசுப்பிரமணி, அனகாபுத்தூர் செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை முதல் மாலை வரை பல்லாவரம், குரோம்பேட்டை, ராதா நகர், அஸ்தினாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 டன் மாம்பழங்கள், கார்பைடு கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை ஒரு லாரியில் கொண்டு சென்று, குரோம்பேட்டை குப்பை கிடங்கில், ராட்சத பள்ளம் தோண்டி போட்டு, பினாயில் ஊற்றி, மண் போட்டு மூடி அழித்தனர். இதேபோல தரமற்ற குளிர்பானங்களையும் ஆய்வு செய்து பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் கூறுகையில், நகராட்சியில் உள்ள குளிபானம் மற்றும் பழக்கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி, கார்பைடு கல் வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும். தற்போது பல்லாவரம் நகரில் பறிமுதல் செய்யப்பட்ட பழக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
No comments:
Post a Comment