சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு, பார்சல் மூலம் வந்த, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெளி மாநிலங்களில் இருந்து ஏஜன்டுகள் மூலமாக, தொடர்ந்து போதை வஸ்துகள், தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார், 46. நேற்று இவர், ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவு அலுவலகத்துக்கு வந்துள்ளார். கோவை எக்ஸ்பிரஸில், சென்னையில் இருந்து ராஜ்குமாருக்கு, கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது.
ராஜ்குமார் அந்த பார்சலை வாங்கியுள்ளார். அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வந்திருப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, போலீஸார் தனசேகரன், சரவணன், ராஜாமணி உள்ளிட்டோர், ராஜ்குமாரிடம் இருந்து பார்சலை வாங்கி பிரித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துக்கள் இருப்பது தெரிய வந்தது. ஆர்.பி.எஃப்., போலீஸார், போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
பிடிப்பட்ட ராஜ்குமார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையில் இருந்து வந்த கூரியர் அலுவலகத்தில், அங்கிருந்து ராஜ்குமாருக்கு போதை வஸ்துகளை பார்சல் அனுப்பியவர் யார் என்பது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment