சேலம், ஜூன்.25-
கல்மாவு, ஈரமாவு சேர்த்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த மேலும் ஒரு ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்‘ வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஜவ்வரிசி ஆலையில் கடந்த 20-ந் தேதி, சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மரவள்ளிகிழங்கு மாவில் ரசாயன பவுடர் மற்றும் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி தயாரிப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆலை உரிமம் பெறாமல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த ஆலைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதை கண்டிக்கிற வகையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவை, ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க வேண்டும் என்றும், ஜவ்வரிசி ஆலையில் சுகாதாரமான முறையில் ஜவ்வரிசி தயாரிக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தனர்.
மீண்டும் ஆய்வு
இந்த நிலையில் நேற்று சேலம் அருகே உள்ள அக்ரஹார நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஜவ்வரிசி ஆலையில், கலப்படம் செய்து உற்பத்தி செய்வதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார்ஜெயந்த் உத்தரவையும், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் அனுமதியையும் பெற்ற டாக்டர் அனுராதா, கலப்படம் நடப்பதாக கூறப்பட்ட ஆலைக்கு விரைந்து சென்றார்.
அப்போது ஜவ்வரிசி ஆலைக்குள் தலா 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 கேன்களில் சோடியம் ஹைபோ-குளோரைடும், 2 கேன்களில் சல்பியூரிக் அமிலமும் இருந்தது. மேலும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதற்காக மரவள்ளிகிழங்கை தோல் உரிக்காமல் அரைத்து வைத்த ஈரமாவு, கல்மாவு(சாக்பீஸ் தயாரிக்கும் மாவு) மற்றும் மக்காச்சோளமாவும் இருந்தது. இந்த ஆலைக்கு பெயர் ஸ்ரீஹரி சேகோபேக்டரி என்பதும், அதன் உரிமையாளர் சேல த்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பதும் தெரியவந்தது.
2 புரோக்கர்கள்
இந்த ஆலைக்கு, சேலத்தை சேர்ந்த ஜெகன், ஆத்தூரை சேர்ந்த ஜெகநாதன் ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு ஈரமாவு, கல்மாவு ஆகியவற்றை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதுபோல சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலைகளுக்கும் இருவரும் சப்ளை செய்துள்ளனர்.
ஈரமாவு, கல்மாவு, மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதால், எடை அதிகரிக்கும் திட்டத்துடன் இதை ஆலை உரிமையாளர் செய்திருப்பதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆலையில் வைக்கப்பட்டிருந்த 13 கேன்களில் உள்ள அமிலம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆலை ‘சீல்‘ வைப்பு
மேலும் ஆலையில் உள்ள ஜவ்வரிசி மாதிரி சேகரிக்கப்பட்டு, அதை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்று மீண்டும் ஜவ்வரிசி ஆலை செயல்படாமல் இருக்கும் வகையில் டாக்டர் அனுராதா அந்த ஆலையை பூட்டி ‘சீல்‘ வைத்தார்.
தொடர்ந்து ஜவ்வரிசி ஆலைகள் சோதனை நடத்தப்படும் என்றும், அங்கு கலப்படம் மற்றும் முறைகேடு ஏதேனும் நடப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாக்டர் அனுராதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment