Jun 25, 2014

உணவு பாதுகாப்பு துறை அதிரடி சேலத்தில் மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு சீல் ஆலை உரிமையாளர்கள் பீதி


சேலம், ஜூன் 25:
சேலத்தில் மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம், ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜவ்வரிசி தயாரிப்பில் சேலம் மாவட்டம் முன்னணி இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் சமீப காலமாக சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாகவும், விலை குறைந்த மக்காச்சோள மாவு கலப்படம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் முத்தரப்பு கூட்டம், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் ஒரு சேகோ ஆலைக்கு சீல் என மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பாக செயல்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் சேலம் தாலுக்கா ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஜாகீர்ரெட்டிப்பட்டியில் சேகோ ஆலைக்கு சீல் வைத்த, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சேலத்தில் நேற்று, மீண்டும் ஒரு சேகோ ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும், சேகோ ஆலை உரிமையாளர்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஆலையில் ஜவ்வரிசி தயாரிக்க சோடியம் ஹைபோ குளோரைடு மற்றும் சல்பியூரிக் ஆசிட் போன்றவற்றை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் மற்றும் அமிலங்களை பயன்படுத்தியதால், அதிகாரிகள் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு இருந்த ரசாயன பொருட்களும் அழிக்கப்பட்டன.
சோதனையின் போது, ஆலை உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் ஆலை உரிமையாளரான வெங்கடாசலம், சேலத்தை சேர்ந்த ஜெகன் மற்றும் ஆத்துரை சேர்ந்த ஜெகன்நாதன் என்ற புரோக்கர்களின் மூலமாக அரைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு மாவை ஆத்தூரில் இருந்து வாங்கி, ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்து டாக்டர் அனுராதா கூறுகையில், மரவள்ளிக்கிழங்கை அரைப்பதற்கான வசதி இல்லாத சில ஆலை உரிமையாளர்கள், அரைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு மாவை வெளியில் இருந்து பெற்று ஜவ்வரிசி தயாரித்து வருகின்றனர். இதில், மக்காச்சோள மாவு, அரிசி மாவு, சாக்பீஸ் மாவு போன்றவை கலக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் சேகோ ஆலைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆலையில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு, சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தின் சோதனைக்கான அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment