சேலம்: அயோத்தியாபட்டணம் அருகே, ஈரமாவை வாங்கி வந்து, கெமிக்கல் கலந்து ஜவ்வரிசி தயாரித்த, சேகோ ஆலைக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரி சீல் வைத்தார்.
சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் உள்ளன. இங்கு, ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். மரவள்ளி கிழங்கின் தோலில், விஷத்தன்மை அதிகம் கலந்துள்ளதால், அவற்றை நீக்கி விட்டு, ஜவ்வரிசி உற்பத்தி செய்ய வேண்டும். வெளிர்நிறத்துக்காக, கெமிக்கல் அதிகம் கலப்பதும் நடந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்து எச்சரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள அம்மன் சேகோ ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரமாவை வாங்கி வந்து, அதில் கெமிக்கல் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதாக, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், அயோத்தியாபட்டணத்தை அடுத்த, அக்ரஹாரநாட்டாமங்கலத்தில், ஸ்ரீஹரி சேகோ ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆத்தூரில் இருந்து ஈரமாவு வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. அதற்கான எந்த ஆவணமும் இல்லை.
ஈரமாவில், கல்மாவு, அரிசிமாவு, மக்காச்சோள மாவு பயன்படுத்துகின்றனர். ஹரி சேகோ ஆலையில், 600 லிட்டர் சோடியம் ஹைபோ குளோரைடு, 45 லிட்டர், சல்பரி ஆசிட் இருந்தது கண்டறியப்பட்டது. ஜவ்வரிசியும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கெமிக்கல் பயன்படுத்தி வருவது தெரியவந்ததால், அந்நிறுவனத்துக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
""கெமிக்கல் கலந்திருப்பது தெரியும்பட்சத்தில், சம்மந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறினார்.
No comments:
Post a Comment