சேலம்:சேலம், சிவதாபுரத்தில் உள்ள வெல்லமண்டிக்கு, நேற்று சர்க்கரை கலந்து உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, 8,400 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. "கலப்பட வெல்லம் விற்பனைக்கு வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, வெல்ல ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சேலம், சிவதாபுரம், மூலப்பிள்ளையார் கோவில் அருகில், வெல்லம் ஏல மண்டி உள்ளது. ஓமலூர், காமலாபுரம், வட்டக்காடு, ஒட்டத்தெரு, வெள்ளாளப்பட்டி, நாலுக்கால்பாலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 100க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும், வெல்லம், சிவதாபுரம் ஏல மண்டியில் ஏலம் விடப்படும். செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெல்லத்தை வாங்கி செல்வர்.
சேலத்தில் உள்ள பெரும்பாலான வெல்ல ஆலைகளில், சர்க்கரை கலந்து வெல்லம் உற்பத்தி செய்யப்படுவதாக, சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு புகார் சென்றது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, நேற்று சிவதாபுரத்தில் உள்ள வெல்ல மண்டியில் திடீர் ரெய்டுக்கு சென்றார். ஆய்வின் போது, ஏழு வேனில், சர்க்கரை கலந்து உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும், தலா, 1,200 கிலோ, வெல்லம் வீதம், மொத்தம், 8,400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
வெல்லம் தயாரிக்க கரும்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு டன் கரும்பில், 100 கிலோ வெல்லம் தயாரிக்க முடியும். ஆனால், ஆலை உரிமையாளர்கள், சர்க்கரையை கிலோ 20லிருந்து, 22 ரூபாயக்கு வாங்கி வந்து, வெல்லம் தயாரிக்கின்றனர். வெல்லத்தை கிலோ, 45ல் இருந்து, 50 ரூபாய் வரை, விற்பனை செய்கின்றனர்.
வெல்லத்தை தயாரிக்க 70 பிபிஎம் (பாஸ்பர் மில்லியம்) கெமிக்கல்லை பயன்படுத்தலாம். இதனால், உடலுக்கு தீங்கு ஏற்படாது. ஆனால், இவர்கள் சூப்பர் பாஸ்பேட் (உரம்), சஃபாலைட் (தொழிற்சாலை கெமிக்கல்) ஆகியவற்றை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கின்றனர்.
வெல்லம், மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்க, ஒரு சில ரசாயனங்களை கலக்கின்றனர். இதை பயன்படுத்தும் மக்கள், உடல் நலம் பாதிக்கப்படும். ஓமலூர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆலைகளில் இருந்து, வாகனங்களில் வெல்லத்தை கொண்டு வருபவர்கள், எந்தவித பாதுகாப்பு, சுகாதாரம் இல்லாமல் எடுத்து வருகின்றனர்.
சுகாதாரத்துறையில் பெறப்பட்ட அனுமதி, வெல்லம் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அளவு உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லாமல் எடுத்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு விதிமுறைக்குட்பட்டு, 100 சதவீதம், கரும்பு சாற்றிலிருந்து வெல்லத்தை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து, இதே போல விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டால், ஆலைகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment