தேனீக்களுக்குக் கொடுக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்களிடம் எப்படிப்பட்ட உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்த்தோம். அதைவிட நீண்டகாலமாகவும், பரவலாகவும் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தப்படும் மற்றொரு துறை கறிக்கோழி (பிராய்லர் சிக்கன்) உற்பத்தி.
உயிருக்கு ஆபத்து
அமெரிக்காவில் உறைநிலையில் 10 ஆண்டுகளுக்கு வைக்கப்பட்ட கறிக் கோழி மிச்சங்கள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்துள்ளது. அதற்காக உள்நாட்டில் விற்கப்படும் கறிக்கோழி ஆரோக்கியமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கறிக்கோழிகளைப் பார்க்கும்போதும், சாப்பிடும்போதும் நமக்கு எச்சில் ஊறலாம். ஆனால், பிராய்லர்களில் கூட்டம்கூட்டமாக அடைக்கப்பட்டுத் தீவனத்துடன், ஆன்ட்டிபயாட்டிக் திணிக்கப்பட்ட கறிக்கோழிகள் மனிதர்களின் உடலில் ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை என்கிறது புதுடெல்லி சுற்றுச்சூழல் மற்றும் அறி வியல் மையம் (CSE) நடத்திய ஆய்வு.
21-ம் நூற்றாண்டில், பிந்தைய ஆன்ட்டிபயாட்டிக் யுகத்தில் சாதாரண நோய்த்தொற்றுகள், சிறிய காயங்கள்கூட உயிரைப் பறிக்கக்கூடியதாக மாறியுள்ளன. அதற்குக் காரணம் நோய்த்தொற்றை மட்டுப்படுத்த ஒருவர் முயற்சிக்கும்போது, ஏற்கெனவே உடலில் சேர்ந்த ஆன்ட்டிபயாட்டிக் எச்சமும், கூடுதல் எதிர்ப்புசக்தி கொண்ட பாக்டீரியாக்களும் கட்டுப்பட மறுப்பதுதான். இதுவே Antibiotic Resistance அல்லது கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தி.
பக்கவிளைவு அதிகம்
இதன் காரணமாகப் பொதுவான நோய்த்தொற்றுகளுக்குச் சிகிச்சை அளிப்பது கடினமாகவும், சில நேரம் சிகிச்சை அளிக்க முடியாமலும் போகிறது, உடல் மீள்வதற்குத் தாமதமாகிறது, இறப்புகள் அதிகரிக்கின்றன, சிகிச்சை செலவு அதிகரிக்கிறது, நோய் தொற்று பரவலாகிறது, நோய்க்கிருமிகளின் எதிர்ப்புசக்தியும் அதிகரித்துவிடுகிறது.
இப்பிரச்சினையால் தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பயனற்றவையாக மாறிவருகின்றன. அதனால், இரண்டாம் வரிசை ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கல் என்னவென்றால், இவற்றின் விலையும் அதிகம், பக்க விளைவுகளும் மோசமானவை.
இதன் விளைவாகப் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நடைமுறைகள் போன்றவை தோல்வியில் முடிகின்றன அல்லது ஆபத்தானவையாக மாறிவருகின்றன.
குழந்தைகள் பலி
இந்தியாவில் கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தி எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது தொடர்பாகக் கணிக்கப்பட்ட முடிவுகள் அதிர்ச்சி தருகின்றன. பிறந்து நான்கு வாரங்களுக்குள் இறந்து போகும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 2 லட்சம். இதில் மூன்றில் ஒரு குழந்தை, கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தி காரணமாக இறந்துபோகிறது.
அது மட்டுமல்லாமல், காசநோய்க்குச் சிகிச்சை பெற்றவர் களில் மருந்து செயலாற்றாமையால் மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 15 சதவீதம் பேர், கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள்.
இறைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக்
தேசிய அளவில் கறிக்கோழி, மாடு, பன்றி, மீன் வளர்ப்பில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நோய்த்தொற்றை முன்கூட்டியே தடுக்கவும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆன்ட்டிபயாட்டிக் வாரி இறைக்கப்படுகிறது. இதுவே நோய்க்கிருமிகள் கூடுதல் எதிர்ப்புசக்தியைப் பெறுவதற்கு முக்கியக் காரணம்.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மொத்த ஆன்ட்டிபயாட்டிக்குகளில் 80 சதவீதம் கால்நடை வளர்ப்புக்கும், 20 சதவீதம் மனிதத் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதைப்போலவே இந்தியாவில் கறிக்கோழி, மீன் வளர்ப்பில் பெருமளவு ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது. எந்த அரசு விதிமுறைகளும் இதைக் கட்டுப்படுத்தவும் இல்லை, பயன்படுத்தப்படும் மொத்த அளவுக்கு எந்தக் கணக்கும் இல்லை என்பதுதான் வயிற்றைக் கலக்குகிறது.
எப்படிப் பாதிக்கிறது?
கிருமிகளின் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைகளில் மனிதர்களைப் பாதிக்கிறது. முதலாவது, கால்நடைகளுக்கு ஆன்ட்டிபயாட்டிக்கை குறைந்த அளவில் தொடர்ச்சியாகக் கொடுத்துவருவதன் காரணமாக, அவற்றின் உடலில் தொற்றும் பாக்டீரியா கூடுதல் எதிர்ப்புசக்தியைப் பெற்றுவிடுகிறது. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துக்கு எதிராகக் கூடுதல் எதிர்ப்புசக்தி பெறும் இந்தப் பாக்டீரியா, இறைச்சி உணவு வழியாக மனித உடலுக்குள் நுழைகிறது.
இரண்டாவது, கால்நடை உற்பத்திப் பொருட்களான இறைச்சி, முட்டை, பால் போன்றவை மூலமாக மனித உடலுக்குள் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் சேர்கிறது. இதனால் நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் கூடுதல் எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன.
இறைச்சி சாப்பிடாதவரும்...
அது மட்டுமில்லாமல் கால்நடைப் பண்ணையின் திட, திரவக் கழிவுகள் மூலம் ஆன்ட்டிபயாட்டிக் எச்சமும், கூடுதல் எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியாவும் மனிதர்களின் உடலை அடைய நிறைய வாய்ப்பு உண்டு. கோழிப் பண்ணைகள், இறைச்சிக்கூடம், இறைச்சி விற்பனையகம் போன்றவை மூலமாகவும் இப்பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இதன் மூலம் இறைச்சி உண்ணாதவர்களையும் இந்தப் பிரச்சினைகள் பாதிக்கக்கூடும் என்பதுதான் நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டியது.
கறிக்கோழி வளர்ப்பில் குஞ்சு பொரித்த முதல் நாளில் இருந்து, நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகக் குஞ்சுகளுக்கு ஆன்ட்டிபயாட்டிக் செலுத்தப்படுகிறது. அத்துடன், கோழிப் பண்ணைகளில் ஆன்ட்டிபயாட்டிக் வளர்ச்சி ஊக்கிகள் (antibiotic growth promoters - AGPs) என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. பிராய்லர் கோழிக் குஞ்சுகள் வாழ்நாள் முழுக்கச் சாப்பிடும் தீவனம், ஆன்ட்டிபயாட்டிக் கலக்கப்பட்டே தரப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் இந்தக் கோழிக் குஞ்சுகள் சதைப்பற்றுடன் கொழுகொழுவென வளரும், அதேநேரம் இக்குஞ்சுகள் தீவனத்தை அதிகம் சாப்பிடாது. இதனால் உற்பத்தியாளர்களுக்குத் தீவனச் செலவு பெருமளவு குறையும் என்கிறது சி.எஸ்.இ.
ஒரு பண்ணையில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் செலவாகிறது என்றால், ரூ. 1.75 கோடிக்கு மேல் கோழிப்பண்ணை உரிமையாளருக்கு லாபமாகக் கிடைக்கிறது.
பரிந்துரை அவசியமில்லை
அது மட்டுமில்லாமல், எந்த நோயும் தொற்றாதபோதும்கூட, பண்ணையில் உள்ள அனைத்துக் கோழிகளுக்கும் துணைச் சிகிச்சைக்குத் தரப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் புகட்டப்படுகிறது. நோய்த் தடுப்பு நடைமுறையாக இது வழக்கத்தில் உள்ளது.
பொதுவாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை வாங்குவதற்குக் கால்நடை மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் ஆன்ட்டிபயாட்டிக் கலக்கப்பட்ட தீவனங்களும் சந்தையில் மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றன.
இறைச்சி உண்பவர்கள் ஆசைப்படும் வகையில் சிக்கன் லாலிபப்பும், கோழிக்காலும் கிடைக்கின்றன என்றாலும், அவற்றின் உற்பத்தி நடைமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்பது சி.எஸ்.இ. நடத்திய ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இப்படி ஆரோக்கியத்தை அடகு வைத்து உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள், நம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
No comments:
Post a Comment