கோவை, ஜூன் 11:
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளிலுள்ள பெட்டிக்கடைகள், மளிகைகடைகள் போன்றவற்றில் போலீசார் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர்களை கைது செய்தனர்.
கோவை மாநகர் பகுதிகளிலுள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பல வகை புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாகவும், பள்ளி, கல்லூரி அருகில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை தடையை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும் மாநகர போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் மாநகர போலீசார் நேற்று தங்கள் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
சிங்காநல்லூர் போலீசார் ஒண்டிப்புதூரிலுள்ள கேபிஜே மளிகை கடை, சிங்காநல்லூர் சுப்ரமணியம் பிள்ளை வீதியிலுள்ள ஏ1 மளிகை கடை போன்றவற்றில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை விற்ற ஒண்டிப்புதூரை சேர்ந்த ஜோசப் செபஸ்டின்(55), சிங்காநல்லூரை சேர்ந்த அழகப்பன்(50) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களது கடையில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், பான்பராக், கணேஷ் உள்ளிட்ட 201 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கோவைப்புதூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி அருகேயுள்ள பேக்கரி, மளிகை கடைகளில் குனியமுத்தூர் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தடையை மீறி கல்லூரி அருகே பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பீடி, சிகரெட்டுகளை விற்ற குனியமுத்தூரை சேர்ந்த சாமி(40), கோவைப்புதூரை சேர்ந்த கதிரேசன்(55), கோவைப்புதூரை சேர்ந்த வேலுசாமி(41) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 39 பாக்கெட் பீடி, சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment