Jun 11, 2014

ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுக்க கண்காணிப்புக் குழு: முத்தரப்புக் கூட்டத்தில் முடிவு



சேலத்தில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில், ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுக்க அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஜவ்வரிசியில் மக்காச்சோள மாவு, ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்படுவதால், மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் .மகரபூஷணம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
மரவள்ளிக் கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு சரியான விலைக் கிடைக்கவேண்டும் என்றால் கலப்படத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஜவ்வரிசியில் மக்காச்சோள மாவு கலப்படம் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சந்தையில் மரவள்ளிக் கிழக்கின் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதனால், அதன் பாதிப்பு விவசாயிகளுக்கே ஏற்படுகிறது. எனவே, எந்தக் காரணத்தை கொண்டும் ஜவ்வரிசியில் மக்காச்சோளம், ரசாயனப் பொருள்களைக் கலப்படம் செய்யக் கூடாது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஜவ்வரிசி ஆலை நிர்வாகத்தினர் பேசியது:
கலப்படம் தொடர்பாக சில ஆலை உரிமையாளர்கள் செய்யும் தவறால், அனைத்து ஜவ்வரிசி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவ்வரிசியின் தர நிர்ணயம் குறித்து, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, கலப்படத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆலை உரிமையாளர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றனர்.
மாவட்ட ஆட்சியர் .மகரபூஷணம் பேசியது:
ஜவ்வரிசியில் மக்காச்சோளம், ரசாயனப் பொருள்களை கலப்படம் செய்வது உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். இத்தகைய கலப்படத்தைத் தடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழில்சாலைகள் துறை, வணிகவரித் துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு புதன்கிழமை முதல் ஜவ்வரிசி ஆலைகளில் தீவிரக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
இந்தக் குழுவின் ஆய்வில், கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஜவ்வரிசி ஆலை நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ஜவ்வரிசியும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும். எனவே, ஆலை நிர்வாகிகள் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை கைவிட வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், சேகோ சர்வ் நிர்வாக இயக்குநர் வி.சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகள் வெளிநடப்பு ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தடுப்பது தொடர்பான முத்தரப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் வந்திருந்தனர். ஆனால், மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, வெளிநடப்பு செய்தனர்.
அப்போது விவசாயிகள் கூறியது:
கலப்படம் என்பது தடுக்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு முத்தரப்புக் கூட்டம் போட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதில்லை. எனினும், இங்கு முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதும், இதைத் தொடங்குவதில் காலதாமதம் செய்வதும் ஜவ்வரிசி ஆலை நிர்வாகத்துக்கு சாதமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வதாரத்தை பாதிக்கும் ஜவ்வரிசி கலப்படத்தை தடுத்திட வேண்டும் என்றனர்.
பெரும்பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்து, குறைந்த அளவு விவசாயிகளே கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment