Jun 11, 2014

சேகோவில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை! : 5 துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் உத்தரவு



"ஐந்து துறை அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, சேகோவில் கலப்படம் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,மரவள்ளி கிழங்கு விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்களுடன் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், ஈரோடு உள்பட, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல் பகுதியில் உள்ள, 400க்கும் மேற்பட்ட சேகோ பேக்டரிகளில் அரவை செய்து, ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
மரவள்ளி கிழங்கில் இருந்து கிடைக்கும், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆகியவை, 58 சதவீதம் உணவு பொருளாகவும், 28 சதவீதம் கால்நடை தீவனம், நான்கு சதவீதம் ஸ்டார்ச் மாவை பயன்படுத்தி, திரவகுளுகோஸ், டெக்ஸ்ட்ரோஸ் மருந்துக்கு பயன்படுத்துகின்றனர்.
ஆத்தூர் பகுதியில் உள்ள, சேகோ பேக்டரிகளில், 30 சதவீதம் மரவள்ளி கிழங்கு மாவுடன் (ஸ்டார்ச்), 60 சதவீதம் மக்காச்சோளம் மாவு கலந்து தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்றனர். ஜவ்வரிசி தரம் பாதிப்பதுடன், மக்காச்சோளம் கலந்து தயாரிக்கும் சேகோவில், புரோட்டீன் அதிகரிக்கும் என்பதால், உடல் பருமன் எடை அதிகம் போன்ற உடல் உபாதை ஏற்படும் என, மரவள்ளி விவசாயிகள், புகார் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில், ஜவ்வரிசி உற்பத்தியில், கலப்படத்தை தவிர்க்க, விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்களுடன், நேற்று, 10ம் தேதி, மாலை, 4.30 மணியளவில், முத்தரப்பு கூட்டம் நடப்பதாக, விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள், சேகோ சர்வ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்தார்.
நேற்று, மாலை, 4.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, மரவள்ளி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள், சேகோ சர்வ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்தனர். மாலை, 5.45 மணி வரை, கலெக்டர் வராததால், ஏராளமான விவசாயிகள் புறக்கணிப்பு செய்தனர்.
மாலை, 6 மணிக்கு மேல், கலெக்டர் மகரபூஷணம் வந்தவுடன், சேகோ ஆலை உரிமையாளர்கள், 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன், முத்தரப்பு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், ""சேகோவில், ரசாயனம், மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்வது, சட்டத்துக்கு புறம்பானது என்பதால், உணவு பாதுகாப்பு துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, வணிக வரித்துறை, சேகோ அதிகாரிகள் என, ஐந்து துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுவினர், எந்த நேரத்திலும் ஆய்வு பணி மேற்கொள்ளலாம்.
மக்காச்சோளம் கலப்படம் கண்டறியப்பட்டால், சேகா ஆலைக்கு, "சீல்' வைத்தல் போன்ற குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாளை (இன்று) முதல், இந்த உத்தரவு அமலுக்கு வரும்,'' என, தெரிவித்தார்.
இதை சேகோ ஆலை உரிமையாளர்களும், ஒப்புக்கொண்டனர். தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கம், மாநில செயலாளர் சுந்தர்ராஜன், நமது நிருபரிடம் கூறியதாவது:
இந்தியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட, 13 மாநிலங்களில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வதால், 60 லட்சம் டன் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உணவு பொருளாகவும், மருந்து தயாரிப்புக்கு பயன்படுகிறது.
ஜவ்வரிசி, ஒரு மூட்டை (100 கிலோ), 5,500 ரூபாயும், ஸ்டார்ச், மூட்டை, 4,000 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், மரவள்ளி கிழங்கு, ஒரு மூட்டை (75 கிலோ), 300 ரூபாய் என, குறைவாக வாங்குகின்றனர். மரவள்ளி கிழங்கின் ஸ்டார்ச் மாவுடன், மக்காச்சோளம் மாவு கலந்து, கலப்படமாகவும், தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்தால், இத்தொழில் அழிந்து விடும் என்பதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவுத்துறையில், கரும்பு ஆலை செயல்படுவது போல், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சேகோ ஆலை அமைத்தால், 15 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என, கூறினார்.

No comments:

Post a Comment