Apr 25, 2015

சேகோ ஆலையில் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவு பறிமுதல் குடோன் ‘சீல்’வைப்பு

ஆத்தூர் அருகே கலப்படம் செய்வதற்காக சேகோ ஆலையில் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திடீர் சோதனை
ஆத்தூர் அருகே வீரகனூர் ரோட்டில் துலுக்கனூர் கிராமத்தில் அன்பரசு(வயது52) என்பவர் சேகோ ஆலை நடத்தி வருகிறார். இவரது சேகோ ஆலையில் விலைகுறைந்த மக்காச்சோள மாவை கலப்படம் செய்து ஸ்டார்ச் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சேலம் சேகோசர்வ் மேலாளர் ஆறுமுகம், வணிகவரி அலுவலர்கள் சிவக்குமார், தங்கராஜ், அன்பரசு ஆகியோர் சேகோ ஆலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 
பறிமுதல்
அப்போது சேகோ ஆலை குடோனில் கலப்படம் செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்த 60 மூட்டை மக்காச்சோள மாவு பறிமுதல் செய்யப்பட்டது. குடோனுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த சேகோ ஆலையில் 42 ஜவ்வரிசி மூட்டையில் இருந்த ஜவ்வரிசி மாதிரி எடுக்கப்பட்டு உணவு கலப்பட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 
இதேபோல் வீரகனூர் ரோட்டில் இருந்த சேகோ ஆலை, ஸ்டார்ச் ஆலையிலும் சோதனை நடந்தது. ஆத்தூர் மஞ்சினி ரெயில்வே கேட் அருகே ஒரு கடையில் இருந்து காலாவதியான 12 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அருகே இருந்த ஒரு டீக்கடையில் டீ தூளில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு கிலோ டீதூள் சாக்கடையில் கொட்டப்பட்டது. ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். 

No comments:

Post a Comment