ஆத்தூர் ஜவ்வரிசி ஆலையில் ஜவ்வரிசி உற்பத்தியில் மக்காச்சோள மாவை கலப்படம் செய்வதாகக் கிடைத்த புகாரின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தி கிடங்குக்கு "சீல்' வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஜவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியுடன், மக்காச்சோள மாவைக் கலப்படம் செய்வதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார் சென்றது.
இந்தப் புகாரின் பேரில், ஆத்தூர் மஞ்சினி சாலையில் உள்ள அன்பரசு (53) என்பவருக்குச் சொந்தமான ஜவ்வரிசி ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாவட்ட நியமன அலுவலர் டி.அனுராதா தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, ஜவ்வரிசி ஆலையில் உள்ள கிடங்கில் 42 மூட்டைகள் ஜவ்வரிசியும், 60 மூட்டைகள் மக்காச்சோள மாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜவ்வரிசி ஆலை உரிமையாளர் அன்பரசுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு அன்பரசு சரியான பதில் அளிக்காததால், ஜவ்வரிசி ஆலை கிடங்குக்கு நியமன அலுவலர் டி. அனுராதா உத்தரவிட்டதின் பேரில் அலுவலர்கள் "சீல்' வைத்தனர். இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என்.சுந்தர்ராஜன், இ.கோவிந்தராஜ், ஐ.புஷ்பராஜ், எம்.முத்துசாமி, டி.சந்திரசேகரன், வணிக வரித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment