ஆத்தூர்:புதுப்பேட்டை தனியார் சேகோ ஃபேக்டரியில், மரவள்ளி கிழங்கு மாவுடன், மக்காச்சோளம் மாவு கலந்து, தரமற்ற ஜவ்வரிசி தயாரிப்பதற்காக, லாரியில் இறக்கப்பட்ட, 60 மூட்டை மக்காச்சோள மாவு மற்றும் 42 மூட்டை ஜவ்வரிசியை, உணவு பாதுகாப்பு, வணிகவரித்துறை மற்றும் சேகோ அலுவலர்கள் பறிமுதல் செய்து, குடோனுக்கு, "சீல்' வைத்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட சேகோ ஃபேக்டரிகள் உள்ளன. தற்போது, மரவள்ளி கிழங்கு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால், இருப்பு வைத்துள்ள ஸ்டார்ச் மாவு மற்றும் பழைய மாவுகளில் இருந்து, ஜவ்வரிசி தயார் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மக்காச்சோளம் மாவுகளை, மரவள்ளி கிழங்கு மாவுகளுடன், அதிகளவில் கலந்து, தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்வதாக, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு, புகார் சென்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் அனுராதா, சுகாதார அலுவலர்கள் கோவிந்தராஜ், சுந்தரராஜ், புஷ்பராஜ், வணிகவரித்துறை அலுவலர்கள் தங்கராஜ், சிவக்குமார், சேலம் சேகோ சர்வ் மேலாளர் ஆறுமுகம் ஆகியோர், நேற்று, சேகோ ஃபேக்டரிகளில் சோதனை நடத்தினர்.அப்போது, ஆத்தூர் அருகே, புதுப்பேட்டையில் உள்ள, அன்பரசு என்பவரது, சந்துரு சேகோ ஃபேக்டரியில், லாரியில் இருந்து, மக்காச்சோள மாவு மூட்டைகள் இறக்கியது கண்டறிந்தனர்.
தலா, 50 கிலோ கொண்ட, 60 மூட்டை மக்காச்சோள மாவை, பறிமுதல் செய்த அலுவலர்கள், தனி குடோனில் அடுக்கி வைத்து, "சீல்' வைத்தனர். மேலும், சேகோ ஃபேக்டரியில் உற்பத்தி செய்த, தலா, 90 கிலோ கொண்ட, 42 ஜவ்வரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, சாம்பிள் எடுத்த ஜவ்வரிசி, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ஜவ்வரிசி உற்பத்திக்கு, தரமற்ற மக்காச்சோள மாவு பயன்படுத்தியது தொடர்பாக, சேகோ ஃபேக்டரி உரிமையாளர் அன்பரசுவுக்கு, "நோட்டீஸ்' வழங்கியதோடு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.
மக்காச்சோளம் மாவு மூட்டைகளில், உற்பத்தி தேதி, விலை விவரம் இல்லாததோடு, சேகோ ஃபேக்டரிக்கு சப்ளை செய்தது குறித்து, சேலம், வரலட்சுமி ஸ்டார்ச் நிறுவனத்தினரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, சேலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் அனுராதா, கூறியதாவது:புரதசத்து உள்ள, மக்காச்சோள மாவு குறைந்த விலைக்கு கிடைப்பதால், மரவள்ளி கிழங்கு மாவுடன், 80 சதவீதம் கலந்து, தரமற்ற ஜவ்வரிசி உற்பத்தி செய்வது, சட்டத்துக்கு புறம்பானதாகும்.
கடந்த, 2014ல், மாவட்டம் முழுவதும், சேகோ ஃபேக்டரிகளில், 105 சாம்பிள் எடுக்கப்பட்டதில், 50 சாம்பிள் கலப்படம் உள்ளது கண் டறியப்பட்டது. அதில், இரண்டு பேருக்கு, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment