நாமக்கல், ஜூலை 15:
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களில் மக்காச்சோள மாவு மற்றும் ஆசிட் கலப்படம் செய்வதாக விவசாயிகள் கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்களுக்கு செல்லப்பம்பட்டியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:
ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளிக்கிழங்கின் மேற்தோலை முழுமையாக நீக்கி இயற்கையான முறையில் ரசாயனம் மற்றும் மக்காச்சோளம் கலப்படம் இன்றி தயாரிக்கவேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ சான்று 6 மாதத்துக்கு ஒருமுறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சேகோ மற்றும் ஸ்டார்ச் வைக்கப்படும் இருப்பு அறைகள், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். சேகோ மற்றும் ஸ்டார்ச் தயார் செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் குடிக்க நல்ல தண்ணீர் கொடுக்கவேண்டும்.
உணவுப்பொருளின் தயாரிப்பு தேதி லேபிளில் குறிப்பிட வேண்டும். உணவுப்பொருள் தயாரித்த தேதியிலிருந்து, எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என லேபிளில் காண்பிக்கப்பட வேண்டும். தொழிற்சாலையின் நுழைவுவாயிலில், நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும். தொழிற்கூட வளாகத்தில் மூலபொருட்களைத் தவிர வேறு எந்த கலப்பட பொருட்களும் இருக்கக்கூடாது.
ஜவ்வரிசி ஆலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, உள்ளாட்சித்துறையின் அனுமதி, வணிக வரித்துறை பதிவு, தொழிலாளர் நலத்துறை அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி போன்ற துறைகளின் அனுமதி பெற்ற பிறகே உணவுப்பாதுகாப்பு துறையின் உரிமம் வழங்கப்படும்.
அனைத்து ஜவ்வரிசி ஆலைகளிலும் உணவுமாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வின் அடிப்படையில், ரசாயனக் கலப்படம் இருந்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
கூட்டத்தில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், ராமசாமி, சிவநேசன், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தோட்டக்கலைதுறை, வேளாண்மை வணிகத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment