ஆத்தூர்: ஆத்தூர் அருகே, ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்புகளுக்கு, ஆஸிட் பயன்படுத்திய, சேகோ ஆலைக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ள, சேகோ ஆலைகளில், கலப்படம் மற்றும் ஆஸிட் கலந்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கின்றனர் என்ற தகவல், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு வந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில், உணவு ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், புஷ்பராஜ் உள்ளிட்ட குழுவினர், சேகோ ஆலைகளில் ஆய்வு செய்தனர்.ஆத்தூர், தெற்கு காடு பகுதியை சேர்ந்த, அழகேசன் என்பவரது, சூர்ய பிரகாஷ் சேகோ ஆலையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. அப்போது, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிப்பு குடோனில், விஷத்தன்மை கொண்ட "சோடியம் ஹைப்போ குளோரைடு' ஆஸிட் இருந்தது தெரியவந்தது. தலா, 40 லிட்டர் கொண்ட, 10 கேன்களில், 400 லிட்டர் ஆஸிட்டை பறிமுதல் செய்தனர். மேலும், ஸ்டார்ச் மாவு பாலிஷ் செய்வதற்கு, "பிரஷர் மின்மோட்டார்' அகற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, சேகோ ஆலைக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர். ஆஸிட் சப்ளை செய்த, அழகுவேல் என்பவர் மீது, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது: உணவு பொருளான ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்புகளில், விஷத் தன்மை கொண்ட ஆஸிட், மக்காச்சோளம் கலப்படம் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமீபத்தில் நடந்த, சேகோ ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. "பிரஷர்' மின்மோட்டார் அகற்ற வேண்டும் எனவும், ஆஸிட் பயன்படுத்தக் கூடாது எனவும், எச்சரிக்கப்பட்டது. அழகேசனின் சேகோ ஆலையில், 400 லிட்டர் ஆஸிட் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அவரது ஆலைக்கு, "சீல்' வைக்கப்பட்டுள்ளது. ஆஸிட் விற்பனை செய்த அழகுவேல் மீது, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆஸிட் பயன்படுத்தியது குறித்து, டி.ஆர்.ஓ.,வுக்கு பரிந்துரை செய்த பின், சேகோ ஆலைக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment