கோவை: கோவையில், காலாவதியான குளிர்பானம் முறையாக அழிக்கப்படாமல், வெட்டவெளியில் கொட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் யாராவது எடுத்து பருகினால், உடல்நலக்கோளாறு நேரிடும் அபாயமுள்ளது.
உக்கடம் - சுங்கம், பை-பாஸ் ரோட்டில், வாலாங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே, 200 மி., குளிர்பான 'பெட்' பாட்டில்கள் குவியல், குவியலாக ஆயிரக்கணக்கில், கொட்டப்பட்டுள்ளன. பாட்டில் ஸ்டிக்கரில், பி.எஸ்.ஆர்., புட்ஸ், மேங்கோ லைப் ஜூஸ்; முகவரி, 47, பி.பி., அம்மன் கோவில் வீதி, பல்லாவரம், சென்னை; குளிர்பானத்தின் தயாரிப்பு தேதி பிப்., 12, 2011 என்றும், மூன்று மாதம் வரை பயன்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. காலாவதியான குளிர்பானம், முறையாக அழிக்கப்படாமல் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. சிறுவர்களோ, விழிப்புணர்வு இல்லாதவர்களோ அவற்றை எடுத்து பருகினால், உடல்நலக்கோளாறு நேரிடும் அபாயமும் உள்ளது. பாட்டில்கள் கொட்டப்பட்டது, உணவுப்பொருள் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கும், மாநகராட்சி பொதுச்சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. காலாவதியான குளிர்பானத்தை குடித்தால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், வயிறு சம்பந்தமான பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்கின்றனர், டாக்டர்கள். மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருணாவிடம் கேட்டபோது, ''பொது இடத்தில், காலாவதி குளிர்பான பாட்டில்கள் கொட்டப்பட்டது குறித்து, தகவல் தெரியாது. உடனடியாக சேகரித்து அழிக்கப்படும்,'' என்றார்.
அழிப்பது எப்படி?
கோவை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது: காலாவதி குளிர்பான பாட்டில்கள், பொதுஇடத்தில் கொட்டப்பட்டது குறித்து எமக்கு தகவல் இல்லை; ஆய்வாளர்களை அனுப்பி விசாரிக்கிறேன். உணவு பொருள் கலப்படம் மற்றும் காலாவதி உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க, மூன்று நாட்களாக கோவையில் ஆய்வு செய்து வருகிறோம். பயந்து, குளிர்பான பாட்டிலை கொட்டியிருப்பார்கள். அவை, மாநகராட்சி குப்பை கிடங்கில் அழிக்கப்படும். குளிர்பான தயாரிப்பாளரிடம் விசாரிக்கப்படும். காலாவதியான குளிர்பானங்களை, வெட்டவெளியில் வீசக்கூடாது. அந்தந்த நிறுவனங்களே, திரும்ப சேகரித்து, தொழிற்சாலையில், அதற்குரிய முறைகளை கையாண்டு அழிக்க வேண்டும். பொது இடத்தில் கொட்டியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment