திருவாடானை, ஜூன் 24:
தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் திருவாடனையில் அமோக விற்பனை செய்யப்படுவதால், அவற்றை பறிமுதல் செய்து, கடைக்காரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை இருந்தபோதிலும், பல இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது. கடைக்காரர்கள் வழக்கமாக விற்கும் விலையைவிட ரூ.10 முதல் 20 வரை கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.
திருவாடனையில், சிறிய கடைமுதல் பெரிய கடை வரை மறைவாக வைத்து விற்பனை செய்கின்றனர். ஆரம்ப காலங்களில் தீவிரமாக சோதனை செய்த அதிகாரிகள், பின்னர் கண்டு கொள்ளவில்லை.
இதனால், தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் வியாபாரிகள் தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் என்பவர் கூறுகையில், புகையிலை மற்றும் பான்மசாலாவை பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால், தமிழக அரசு தடைசெய்தது. இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் நடைபெற்று வருகிறது. ஆனால், இவையெல்லாம் இருந்தாலும் கூட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை எப்போதும் போல நடைபெற்று வருகிறது. எனவே, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைக்காரர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment