தர்மபுரி,ஜூன் 14:
எத்திலீன் என்ற இயற்கை ஹார்மோனை கொண்டு நவீன முறையில் பழுக்க வைப்பது, இயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பது போன்று பாதுகாப்பானதாகும் என வேளாண் விற்பனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண் துணை இயக்குனர் செல்வம் தெரிவித்திருப்பதாவது:
ஏப்ரல் முதல் ஜூலை வரையில் மாம்பழ சீசனாகும். இந்த 4 மாதங்களில் மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருப்பதால், மாம்பழ விற்பனையாளர்கள் கார்பைடு கற்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கின்றனர். இப்பழங்களை நுகர்வோர் கண்டறிவது மிகவும் கடினம். கார்பைடு கற்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, மயக்கம், அல்சர் போன்ற உபாதைகள் ஏற்படும்.
இயற்கையாக பழங்கள் பழுக்க எத்திலீன் வாயு காய்களிலேயே உற்பத்தியாகிறது. இம்முறையில் பழுக்க நாட்கள் அதிகமாவதாலும், சீராக பழுக்க வைக்க முடியாததாலும், நல்ல நிறம் ஏற்படாததாலும் விற்பனையாளர்கள் லாப நோக்கத்தோடு கார்பைடு கற்களை பயன்படுத்தி மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்கின்றனர்.
இதற்கு மாற்றாக எத்திலீன் எனப்படும் நவீன மற்றும் பாதுகாப்பான இயற்கை ஹார்மோனைக் கொண்டு, பழங்களை பழுக்க வைக்கலாம். மேலும், நவீன அறையில் பழுக்க வைப்பதால் சீரான நிறம், மணம் மற்றும் சுவையும் கிடைக்கிறது. இப்பழங்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும். குறைவான எடை இழப்பு ஏற்படுகிறது. 10 பிபிஎம் முதல் 100 பிபிஎம் அளவில் பழவகைகள் மற்றும் ரகம் ஆகியவற்றை பொருத்து எத்திலீன் வாயுவை பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறை பாதுகாப்பானதாகும். இம்முறையில் ஒரு டன் மாம்பழங்களை பழுக்க வைக்க கி40 மட்டுமே செலவாகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய நிறுவனம் 10 பிபிஎம் முதல் 100 பிபிஎம் எத்திலீன் வாயுவை பயன்படுத்தி 18 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 90 முதல் 95 சதம் ஈரப்பதத்தில் பழுக்க வைப்பது பாதுகாப்பானது என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பழங்கள் பழுக்க வைக்கும் அறைகள் அமைக்க தோட்டக்கலை துறையின் மூலம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பழங்களை பழுக்க வைத்து வியாபாரம் செய்யலாம். இவ்வாறு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் துணை இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment