ஆத்தூர், நவ.9-
ஆத்தூர் அரிசி ஆலையில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் திராவகத்தை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தார்.
அதிரடி சோதனை
ஆத்தூர் வடக்கு உடையார்பாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையை சிவக்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்து ‘அருள்மணி எண்டர்பிரைசஸ்‘ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு அரசு அனுமதியின்றி 3 ஆயிரம் லிட்டர் திராவகம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அந்த குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அங்கு பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் திராவகம் மற்றும் ஒரு பெரிய டேங்கில் பிளீச்சிங் வாட்டர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றி உரிமையாளர் சிவக்குமாரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, திராவகம் மற்றும் பிளீச்சிங் வாட்டரை சொட்டுநீர் பாசனத்திற்கும், டெக்ஸ்டைல் தொழிலுக்கும் விற்பனை செய்வதாக கூறினார்.
பறிமுதல்
ஆனால் அவற்றை விற்பதற்கு சிவக்குமாரிடம் முறையான அனுமதி குறித்த ஆவணங்கள் இல்லாததால் 70 கேன்களில் இருந்த சுமார் 3 ஆயிரம் லிட்டர் திராவகம் மற்றும் பிளீச்சிங் வாட்டர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அங்கேயே ஒரு குடோனில் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட திராவகம், சேகோ ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த திராவகங்கள் எங்கிருந்து, யார் மூலம் வாங்கப்பட்டது? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment