Apr 13, 2013

போலி ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மினரல் வாட்டர் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு


கோவை, ஏப். 13:
கோவையில் போலி ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மினரல் வாட்டர் பாட்டில்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
கோவை இராமநாதபுரம் திருச்சி ரோடு அல்வேர்னியா கான்வென்ட் பள்ளி எதிரே ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வந்தவர் முத்துகுமார் ராஜா. இவர், ஐ.எஸ்.ஐ முத்திரை பெறாமல் போலியாக மினரல் வாட்டர் தயாரித்து வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார் கோவையில் இயங்கி வரும் மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கும் சென்றது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வெங்கடேஷ், ஜெரால்டு, சந்திரன் ஆகியோர் தலைமையில் இத்துறை அதிகாரிகள் நேற்று மினரல் வாட்டர் நிறுவனத்தில் ரெய்டு நடத்தினர்.
அப்போது, போலி ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மினரல் வாட்டர் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 16 பெட்டி பாட்டில்களை பறிமுதல்செய்தனர். ஒவ்வொரு பெட்டியிலும் தலா 15 பாட்டில்கள் இருந்தன. ஆலை உரிமையாளர் அங்கு இல்லை. அவரை பற்றிய தகவல் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, வெளியூர் சென்றுவிட்டதாக கூறினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவுசெய்தனர். இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுபற்றி உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், எங்களுக்கு போலி ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மினரல் வாட்டர் சப்ளை செய்வதாக புகார் வந்தது. அதைத்தொடர்ந்து ஆய்வு செய்த போது போலியாக ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மினரல் வாட்டர் தயாரித்தது தெரியவந்தது. ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.16 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களின் மதிப்பு ஏழாயிரம் ரூபாய். மினரல் வாட்டரை பரிசோதனை செய்வதற்காக சென்னை கிண்டியில் உள்ள அரசு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாமல் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது ரெய்டு தொடரும்“ என்றார்.

No comments:

Post a Comment