Nov 24, 2014

3 மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏலம் தொடங்கியது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் வெல்லம் உற்பத்தி தீவிரம்


சேலம், நவ.24:
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் வெல்லத்தை உற்பத்தி செய்து செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு அனுப்புகின்றனர்.
இவற்றை வியாபாரிகள் ஏலம் எடுத்து கொல்கத்தா, மும்பை, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், செவ்வாய்பேட்டையில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அதிக ரசாயனம் கலந்து இருப்ப தும், அதிகளவு சர்க்கரை பயன்படுத்தி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து எச்சரித்தனர். இதையடுத்து கலப்பட வெல்லத்தை வியாபாரிகள் ஏலம் எடுக்க வரவில்லை. கடந்த 3 மாதமாக வெல்லம் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.
பின்னர், உணவு பாதுகாப்புத்துறை ஆலோசனையின்படி, உற்பத்தியாளர்கள் தற்போது வெல்லம் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்த வெல்லத்தை விற்பனைக்காக மண்டிக்கு இரு தினங்க ளுக்கு முன்பு கொண்டு வந்தனர். மூன்று மாதத்திற்கு பிறகு வெல்லம் ஏலம் நடந்ததால், வியாபாரிகள் போட்டி போட்டு வெல்லத்தை ஏலம் எடுத்தனர்.
இது குறித்த உற்பத்தியாளர்கள் கூறுகையில், பொங்கலை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி அதிகளவில் நடக்கும். வெல்லம் உற்பத்தியில் ஒரு சிலர் எடை வரவேண்டும் என்பதற்காக சிறிதளவு அஸ்கா சர்க்கரை கலந்தனர். இதை அதிகாரிகள் கண்டுபிடித்து எச்சரித்தனர். மூன்று மாதத்திற்கு பிறகு இரு தினங்களுக்கு முன்பு தான் வெல்ல ஏலம் நடந்தது. 30 கிலோ எடைக்கொண்ட 13 ஆயிரம் சிப்பம் ஏலத்திற்கு வந்தது. இதன்மூலம் 45 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசு பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறது. பொங்கல் பரிசு பொருளில் வெல்லம் கொடுக்க, ஒரு மாதத்திற்கு முன்பே வியாபாரிகள் ஆர்டர் தருவார்கள். நடப்பாண்டிற்கு இன்னும் ஒரு வாரத்தில் ஆர்டர் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

No comments:

Post a Comment