சேலம்: ஜவ்வரிசிகளில், கலப்படம் செய்யக் கூடாது என, பலமுறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரித்தும், கண்டுகொள்ளாமல் கலப்பட ஜவ்வரிசி தயாரித்த, மேலும் ஒரு சேகோ ஆலைக்கு, அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டத்தில், உணவு பொருளான ஜவ்வரிசியில், மக்காச்சோள மாவு, கெமிக்கல் கலப்படம் செய்து விற்பனை செய்த ஆலைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை அலுவர்கள், "சீல்' வைத்து வருகின்றனர். இதுபோன்று கலப்படத்துடன் ஜவ்வரிசி தயாரிக்க கூடாது என, தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், மின்னாம்பள்ளி அடுத்த செல்லியம்பாளையம் பகுதியில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, ஜகநாதன் ஆகியோர் அடங்கிய குழு, அண்ணாதுரை என்பவரது, சக்தி சேகோ ஆலையில், நேற்று ஆய்வு நடத்தினர்.அப்போது, தடையை மீறி மக்காச்சோள மாவு மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, ஆலைக்கு, அதிகாரிகள், "சீல்' வைத்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்த ஆலையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் ஆகியவை, ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஆய்வு முடிவில், கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான குற்றப்பத்திரிகை, டி.ஆர்.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இதே ஆலையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடையை மீறி, மரவள்ளி கிழங்கு மாவுடன், மக்காச்சோள மாவு கலப்படம் செய்தும், அவற்றை வெண்மையாக்க கெமிக்கல் பயன்படுத்தப்பட்டதும், கண்டுபிடிக்கப்பட்டு, ஆலைக்கு, "சீல்' வைக்கப்பட்டது. ஆலை உரிமையாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment