சேலம்: "உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படியே, கலப்படம், கெமிக்கல் மிக்ஸிங் செய்யும், சேகோ ஆலைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது' என, சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்டவை தயாரித்து, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஸ்டார்ச் மாவுடன், மக்காச்சோள மாவு கலப்பதாகவும், ஜவ்வரி வெளிர்நிறமாக இருக்க, கெமிக்கல் அதிகம் கலப்பதாகவும், உணவு பாதுகாப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதனடிப்படையில், விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், ஒவ்வொரு சேகோ ஆலை நிர்வாகத்திடமும், கலப்படம் தொடர்பான எச்சரிக்கையும், நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது. சேகோ ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படம் இருப்பது குறித்து வந்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, அயோத்தியாபட்டணம், ஜாகீர்ரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், ஆய்வு நடத்தி, இரண்டு ஆலைக்கு சீல் வைத்தார். இதற்கு, சேகோ ஆலை அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி, ஒரு சில நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என, குற்றம் சாட்டினர்.
இது குறித்து, சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
வெளிமாநிலங்களுக்கு உணவுப்பொருளை அனுப்ப வேண்டுமெனில், மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருளில் கலப்படம் இருந்தால், அது குறித்து நடவடிக்கை எடுக்க எனக்கு, கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார். ஏற்கனவே, சேகோ ஆலை அதிபர்களுக்கு, பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கலப்படம் செய்வது தவறு என்றும் எச்சரிக்கை ஏற்படுத்தி உள்ளோம். அவ்வாறு இருந்தும், மக்காச்சோள மாவு கலப்படம் என்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
சமீபத்தில், இரண்டு ஆலைக்கு சீல் வைத்தபோது, அங்கு ஆலைக்குரிய எவ்வித பாதுகாப்பு வசதியோ, அங்கீகாரமோ இல்லாத நிலை இருந்தது. உணவு பாதுகாப்பு கமிஷனர், கலெக்டரிடம் அனுமதி பெற்ற பின்னர் தான், அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுவரை, 22 நிறுவனங்களில், சாம்பிள் எடுக்கப்பட்டு, 14 நிறுவனங்கள் கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். கிழங்கு வாங்காமல், மக்காச்சோள மாவை கொண்டு, லாபத்தை ஈட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்ட விதி, 36ன்படி, நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment