சேலம்
சேலத்தில் மாம்பழ விற்பனைக் கிடங்குகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாம்பழங்களை பழுக்க வைக்க ரசாயன பொருள்களைப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும், சேலம் மட்டுமே மாம்பழங்களுக்கான மொத்த, சில்லறை விற்பனை மையமாகவும், ஏற்றுமதி மையமாகவும் இருந்து வருகிறது.
இதனால், சேலத்தில் ஏராளமான மாம்பழ வியாபாரிகள் கிடங்குகள் வைத்து மாம்பழங்களை வாங்கி பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கிடங்குகளில் மாம்பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்காக கிராபைட் கல்கள் போன்ற ரசாயனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், அந்த மாம்பழங்களை சாப்பிடுவோருக்கு வயிறு உபாதை உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
எனவே, ஒவ்வொரு மாம்பழ சீசனிலும் ரசாயனங்களைத் தவிர்க்கும்படி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நிகழாண்டில் மாம்பழங்களை ரசாயனம் வைத்து பழுக்க வைக்கின்றனரா? என்பது குறித்து கண்டறிய ஆய்வு நடத்தும்படி உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மருத்துவர் தி.அனுராதா மற்றும் அலுவலர்கள் சேலம் பழைய பேருந்து நிலையம், சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி போன்ற இடங்களில் மாம்பழக் கிடங்குகள், விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது மாம்பழங்களை பழுக்க வைக்கும் முறை குறித்து ஒவ்வொரு கிடங்கிலும் ஆய்வு நடத்தப்பட்டது. பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் கிடங்குகளில் உள்ள மாம்பழங்களை பழுக்க வைக்க திரவ எத்திலின் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. பெரும்பாலான விற்பனையாளர்கள் கிராபைட் கல்களைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தனர்.
திரவ எத்திலின் ரசாயனப் பொருள் என்றபோதும், அதன்மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. வேளாண் துறையே இந்த ரசாயனத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக மருத்துவர் அனுராதா தெரிவித்தார். மேலும், சேலம் மாவட்டத்தில் கிராபைட் கல்கள் மூலம் மாம்பழங்களைப் பழுக்க வைப்பது 95 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதை 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாம்பழ விற்பனையாளர்கள் யாரேனும் தடை செய்யப்பட்ட கிராபைட் கல்கள் போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பழங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களுக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும் போது, மனம், எடை ஆகியவற்றைப் பார்த்து வாங்குவதுடன், அது ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டதா, இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும் என்றார் மருத்துவர் அனுராதா.
மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை
சேலம்: சேலத்தில் உள்ள மாம்பழ குடோன்களில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று திடீர் சோதனை நடத்தினர். சேலம், சின்னக்கடை வீதியில், மாம்பழ குடோன்கள் இருக்கின்றன. இங்குள்ள குடோன்களில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், கார்பைட் கல் மூலம், மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளனரா என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று சோதனை நடத்தினர். சேலம் சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவில், அரசமர பிள்ளையார் கோவில் பகுதியில், ஆறு குடோன்கள் மற்றும், 40க்கும் மேற்பட்ட கடைகளில், சோதனை நடத்தினர். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள் விற்பனையாகும் கடைகளிலும், சோதனை நடந்தது. சோதனையில், எதுவும் சிக்கவில்லை. சந்தேகப்பட்ட ஒரு கடையில் மட்டும், ஆப்பிள் பழங்களை எடுத்து வந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: கார்பைட் கல் வைத்து பழுக்க வைப்பதற்கு பதில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, பத்து மில்லி எத்திலின் டானிக் கலந்து, பழங்களின் மீது ஸ்பிரே செய்கின்றனர். எத்திலின் தெளிக்கப்பட்ட பழங்கள், எந்த ஒரு கேடும் விளைவிப்பதில்லை. அப்பழங்கள், ஓரிரு நாளில் பழுத்து, விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதனால், பொதுமக்கள், பயப்படாமல், மாம்பழங்களை வாங்கி சாப்பிடலாம். சேலம் மாவட்டத்தில், 95 சதவீதம், கார்பைட் கல் வைத்து பழுக்க வைப்பதில்லை. இதனால், பயப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அசோக்குமார், ஜெகநாதன், புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment