சேலம், மே.23-
சேலத்தில் மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
மாம்பழ குடோன்களில் சோதனை
சேலத்தில் உள்ள குடோன்களில் மாம்பழம் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேற்று சேலம் கடைவீதி பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த பகுதிகளில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாம்பழ குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மாம்பழம் பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குடோன்களில் இதை பயன்படுத்தவில்லை என்பதும் இதற்கு பதிலாக அனுமதி பெற்ற எத்திலின் என்ற திரவத்தை பயன்படுத்துவதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் குடோன் உரிமையாளர்களிடம் திரவத்தை பயன்படுத்தும் அளவு குறித்து அறிவுரை வழங்கினர்.
குறிப்பிட்ட அளவு
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு சோதனையின் போது, சில குடோன்களில் கார்பைட் கல் மூலம் மாம்பழம் பழுக்க வைத்தது கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. மேலும் குடோன் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாம்பழம் சீசன் என்பதால் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவுப்படி மாம்பழ குடோன்களில் சோ தனை நடத்தி வருகிறோம்.
இதில் யாரும் கார்பைட் கல் வைத்து மாம்பழம் பழுக்க வைக்கவில்லை. அதற்கு பதிலாக அனுமதிக்கப்பட்ட திரவத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உடலுக்கு கெடுதல் இல்லை. திரவத்தை பயன்படுத்தும் அளவு குறித்து குடோன் உரிமையாளரிடம் அறிவுரை வழங்கி உள்ளோம். எனவே பொதுமக்கள் பயமின்றி மாம்பழம் வாங்கி சாப்பிடலாம்.
No comments:
Post a Comment