Aug 27, 2013

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு:பசுமை தீர்ப்பாயம் கண்டிப்பு

சென்னை: போதிய அவகாசம் கொடுத்தும் குடிநீர் மாதிரி பரிசோதனைகள் முடிக்காதது குறித்து, அதிருப்தி தெரிவித்த பசுமைத் தீர்ப்பாயம், "மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அனுப்பும் குடிநீர், தரமாக இல்லை என, தெரிய வந்ததால், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட, பல நிறுவனங்கள் மூடப்பட்டு, தர பரிசோதனைக்குப் பின், செயல்பட அனுமதிக்கப்பட்டன. இது போன்று, தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்களில், மாதிரி எடுத்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், அனுமதியில்லாத அனைத்து நிறுவனங்களின் குடிநீர் விற்பனைக்கு, இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரத்தில், உணவு பாதுகாப்புத் துறையில் அனுமதி கோரி விண்ணப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தன. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகி, மூன்று மாவட்டங்களில் மட்டுமே, குடிநீர் மாதிரி பரிசோதனை செய்ததாக தெரிவித்தனர். போதிய அவகாசம் கொடுத்தும், பரிசோதனைகளை முடிக்காதது குறித்து, தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் நாகேந்திரனும், அதிருப்தி தெரிவித்தனர். மேலும், "செப்., 4ம் தேதிக்குள், குடிநீர் பரிசோதனை குறித்த தெளிவான விவரங்களை, சமர்ப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் - செயலர், செப்., 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர். "எங்கள் விண்ணப்பத்தை, உணவு பாதுகாப்புத் துறை ஏற்கவில்லை' என, "ஹெர்பல்' குடிநீர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. "அனுமதி கோரி மத்திய உணவு பாதுகாப்புத் துறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், நாங்கள் ஏற்கவில்லை' என, மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அனுமதி பெறுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, செப்., 4ம் தேதி, நேரில் விவரங்கள் தர வேண்டும் என, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணை, செப்., 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment