புகையிலைப் பொருள்களை விற்றால் குற்றவியல் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை
செய்தால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, சேலம் மாவட்ட
ஆட்சியர் க.மகரபூசணம் எச்சரித்தார்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில்,
சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், பான்மசாலா,
குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது தொடர்பாக
மாணவ, மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணியை தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் கூறியது:
மனிதர்கள் பயன்படுத்தும் புகையிலைப் பொருள்களால் புற்றுநோய் ஏற்படும்.
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பேரணி
நடத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பனை
செய்யக் கூடாது என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அறிவுரை
வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஜூன் 22-ஆம்
தேதிக்குள் அகற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறி கடைகளில் புகையிலைப்
பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்றார் அவர்.
மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், உணவுப்
பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் அனுராதா உள்பட பலர் பேரணியில் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment