Jun 21, 2013

குட்கா, பான்மசாலா வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி,
குட்கா, பான்மசாலா வைத்து இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
குட்கா, பான்மசாலா
குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கவோ, இருப்பு வைக்கவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழக அரசு கடந்த மே மாதம் தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது.
கண்காணிப்பு குழு
இந்த ஆணையின்படி திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் புகையிலை பொருட்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட உணவுப் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனைக்காக வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இக்குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சி துறை, (மாநகராட்சி மற்றும் நகராட்சி) வணிகவரித்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், மாவட்ட நியமன அலுவலர்கள் (உணவு பாதுகாப்பு) அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க அலுவலராக செயல்படுவார்கள்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
குட்கா, பான்மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்படுத்துபவர்களுக்கு குறிப்பாக பசியின்மை, மயக்கம், நரம்புத்தளர்ச்சி, மாரடைப்பு ஏற்படுவதோடு புற்றுநோய் அதிகஅளவில் வருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. எனவே. இப்பொருட்களை முற்றிலும் தடைசெய்ய தமிழக அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி அன்று தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், இப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்துள்ளது. அந்த காலக்கெடு 22.06.2013 (நாளையுடன்) முடிவடைகிறது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இப்பொருட்களை விற்பனை செய்தல், தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல் போன்ற செயல்களை கண்காணிப்புகுழு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை மூலம் அழிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் சூப்பிரண்டு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை கமிஷனர் அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, மாவட்ட நியமன அலுவலர்(உணவு பாதுகாப்பு) ராமகிருஷ்ணன், உதவி ஆணையர்(கலால்) மீரா பரமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment