Jun 9, 2013

சரம், சரமாக தொங்கும் குட்கா, பான் மசாலா: காற்றில் பறந்தது தடை உத்தரவு


கோவை :தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவு பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கடைகளில் அவற்றின் விற்பனை தாராளமாக உள்ளது. அரசாணையை அமல்படுத்த கமிட்டி அமைக்கும் அதிகாரிகள், காலத்தை விரயமாக்காமல் களத்தில் குதிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவன ஆய்வில், "நடுத்தர வயது இளைஞர்கள், பெண்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவுப்பொருட்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் தாக்குதலில் 80 சதவீதம் லாகிரி வஸ்துகளால் ஏற்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மாதம் 23ம் தேதி, தமிழக அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிட்ட (எண் 132) அரசாணையில், ""உணவுப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, குட்கா, பான்மசாலா பொருட்கள், புகையிலை, நிகோடின் கலந்த உணவு பொருட்களை தமிழகத்தில் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ, ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது'' என, குறிப்பிட்டுள்ளது.
குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்தால், முழுமையாக அப்புறப்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வரும் ஜூன் 22ம் தேதிக்குள் குட்கா, பான்மசாலா அப்புறப்படுத்த வேண்டும். அரசாணையை அமல்படுத்த, மாவட்ட கலெக்டர் தலைவராக கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது. உணவுப்பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் ஒருங்கிணைப்பாளராகவும், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், துணை இயக்குனர் (சுகாதாரம்) உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளை கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கவும், பணிகள் தீவிரமாக நடக்கிறது. லாகிரி வஸ்துகளை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டாலும், சிறிய பெட்டிக்கடை முதல், பெரிய மளிகை கடை வரையிலும் லாகிரி வஸ்து பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.கோவையிலுள்ள பெட்டிக்கடைகளில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் சரம் சரமாக தொங்க விடப்பட்டுள்ளன. போலீஸ் கெடுபிடியுள்ள பகுதிகளில் மறைமுக விற்பனை நடக்கிறது. அரசின் தடையுத்தரவால், ஒரு பாக்கெட்டின் விலை 20 ரூபாயில் துவங்குகிறது. 
மக்களிடையே புழக்கத்தில் புரையோடி கிடக்கும், குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த, அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது; நுகர்வோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசாணையை அமல்படுத்த கமிட்டி அமைக்கும் அதிகாரிகள், காலத்தை விரயமாக்காமல் களத்தில் குதிக்க வேண்டும்.
கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் கதிரவனிடம் கேட்டபோது, ""கலெக்டர் தலைமையில் எட்டு துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருவதை செக்போஸ்ட்களில் தடை செய்யவும், உள்ளூர் கடைகளில் ஆய்வு செய்யவும், விற்பனை செய்தால் பறிமுதல் செய்து அழிப்பது, விற்பவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
தடையை மீறினால்?
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருப்பு வைக்கவும், விற்கவும் ஓராண்டுக்கு மட்டும் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கமிட்டி அமைத்து கண்காணித்தாலும், இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், தடையை மீறி இவை விற்கப்பட்டால், நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்றால், அவற்றை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்பது மட்டுமே உணவு பாதுகாப்புசட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கமிட்டியில் போலீசாரும் சேர்க்கப்பட்டுள்ளதால், லாகிரி வஸ்துகள் விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கையும் பாயும் நிலையுள்ளது.

No comments:

Post a Comment