கிராமங்கள் தான்
இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தி. நம் நாட்டின் அடிப்படை
பொருளாதார வளர்ச்சி கிராமங்களில் இருந்து தான் துவங்குகிறது. இப்படிப்பட்ட
நிலையில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும்
தரச்சட்டம் கிராம பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் வகையில் உள்ளதாக குற்றம்
சாட்டுகின்றனர் வணிகர்கள். இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைப்
படுத்தப்படும்போது பாரம்பரியம் மிக்க கிராம சந்தைகள் காணாமல் போய்விடும்
என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
உணவு
கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய உணவு பாதுகாப்பு மற்றும் தர
நிர்ணய சட்டம் கடந்த 2006ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான
விதிகள் 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு அனைத்து மாநில அரசுகளும் இதை
அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியது. மத்தியப்பிரதேச மாநிலம் இதை
உடனடியாக முழுமையாக நிறைவேற்ற முடியாது, இந்த சட்டத்தில் நிறைய மாற்றங்கள்
செய்ய வேண்டும். அதனால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அறிவித்தது.
இச்சட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு
பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்களில் சட்டத்தை
மீறி கலப்படம், தயாரிப்பு குறைபாடுகள், பொருட்களின் தரம் மற்றும்
காலாவதியாகும் நாள் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இவர்களுக்கு
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறியிருந்தால் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த
சட்டத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அதில் கூறப்பட்டுள்ள
நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள உணவு
பொருள் தயாரிப்பாளர்கள், உணவு பொருள் விற்பனையாளர்கள், சிறு சில்லறை
வணிகர்கள் கடுமையாக ஆட்சேபித்து வருகின்றனர். இதில் விவசாயிகளுக்கும்
தீங்கு விளைவிக்கும் நிபந்தனைகள் இருப்பதால் பெரிய அளவில் அவர்களும்
நஷ்டப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
விதிக்கப்பட்ட
நிபந்தனையின்படி, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு
எடுத்து வரும் போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்தின்படி
அப்பொருட்கள் இல்லை எனில் எந்த ஒரு வணிகரும் அதை கொள்முதல் செய்ய
முன்வரமாட்டார்கள். இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை வேறு வழியின்றி
அழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதன்பின் அந்த விவசாயியின் நிலை என்னவாகும்
என்பதை இச்சட்டம் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அதே
போல் தயாரிப்பாளர்களுக்கும் அவரின் ஆலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள
நிபந்தனைகளும் ஏற்க முடியாத வகையில் உள்ளதாக கூறுகின்றனர். சட்டத்தில்
சொல்லப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமானால்
தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், வணிகர்களுக்கும் கூடுதல்
முதலீடு தேவைப்படும். ஆனால் இன்றைய நிலையில் இப்படி கூடுதல் முதலீடு
செய்வதற்கு வணிகர்கள் யாரும் தயாராக இல்லை.
மேலும்
உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிலகங்களிலும், உணவு பொருள் வணிக
நிறுவனங்களிலும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள
நிபந்தனைகள் மிக மிக கடுமையானவை. குறிப்பாக 3 மாதத்திற்கு ஒரு முறை அந்த
பணியாளர்கள் தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும் என
சட்டம் சொல்கிறது. இது கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற
தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வேலைக்கு வரும் நபர்களை
பெருமளவு பாதிக்கும். இதனால் அவர்களுக்கு பொருளாதார சிதைவு ஏற்படும்.
இது குறித்து சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் கூறியதாவது:
நடைமுறைக்கு
கடினமாக இச்சட்டங்களையும், விதிகளையும் அமல்படுத்துவதற்கு முன்பாக, நம்
நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான கிராமப்புற உற்பத்தி மற்றும் வணிக
நடைமுறைகள் பற்றி ஆராயாமல் எடுக்கப்பட்ட அவசர முடிவாகவே இச்சட்டம்
குறித்து எண்ணத் தோன்றுகிறது.
மறைமுகமாக
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட
நிலையாகத்தான் இச்சட்டத்தின் நிபந்தனைகள் குறித்து எண்ண வேண்டியுள்ளது.
அன்னிய நாட்டு மிகப்பெரும் பணக்கார குழுமங்களுக்கு சாமரம் வீசும் சட்டமாகவே
இச்சட்டம் சிறு வணிகர்களால் நோக்கப்படுகிறது.
பேரம்
பேசி தேவையான பொருட்களை வாங்க நினைக்கும் மக்கள் நிறைந்த கிராமங்களை
அதிகளவில் கொண்டது நம் நாடு. இவர்கள் கிராமங்களில் வாரம் தோறும் கூடும்
சந்தையை நம்பித்தான் உள்ளனர். அவர்களிடம் பொட்டலப் பொருட்களை மட்டுமே வாங்க
வேண்டும். உயர்தர பாதுகாப்பு கொண்ட உணவு பொருட்களை மட்டுமே உணவுக்காக
பயன்படுத்த வேண்டும் என்று எப்படி வற்புறுத்த முடியும்?
கிராமத்தில்
ஒரு திறந்த வெளியில் மண் திட்டில் தற்காலிக கூடாரம் அமைத்து அதில் ஒரு
நாள் வியாபாரம் செய்யும் இவர்கள் முறைப்படி கட்டப்பட்ட கட்டிடத்தில் தான்
வியாபாரம் செய்ய வேண்டும். விற்பனை பொருட்கள் திறந்த நிலையில் இருக்க
கூடாது. பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்க வேண்டும். அதில் லேபிள்,
முகவரி, எம்ஆர்பி ரேட், காலாவதி தேதி அனைத்தும் இருக்க வேண்டும் என்று
கூறினால் பேரம் பேசி வாங்கும் வாரச்சந்தையில் இதற்கு சாத்தியமில்லை.
கண்டிப்புடன்
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கிராமச் சந்தைகள் இல்லாமல் போகும்.
கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும். கிராமப்புற பொருளாதாரம்
சிதைவடையத் தொடங்கினால் அது மாநில பொருளாதாரத்தை சீர் குலைக்கும். இதன்
காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் அது பாதிக்கும்.
கிராமப்புற சந்தை வணிகம் பாதிக்கப்பட்டால் நாட்டின் ஒட்டு மொத்த உணவு தானிய
வணிகம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை மத்திய அரசு பரிசீலனைக்கு
ஏற்றுள்ளதாக தெரியவில்லை. அதுமட்டுமன்றி, கிராம பொருளாதாரம் சீர்
குலைந்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படும்.
கிராமத்தில் இருந்து
நகர்புறத்திற்கு வரும் பொருட்கள் குறையும். இதனால் விலைவாசி உயரும்.
விவசாயத்தில் சரியான வளர்ச்சி இல்லையென்றால் கிராம மக்கள் தங்கள் தேவைக்காக
நகர்புறத்தை நாட வேண்டியிருக்கும். இதனால் நுகர்பொருட்களுக்கு தேவை
அதிகமாக ஏற்பட்டு விலை உயரும். விவசாயிகளின் பொருளாதாரம் பெரிதும்
பாதிக்கப்படுவதால் அது மாநிலத்தையும் பாதிக்கும்.
மக்கள்
அனைவருக்கும் தரமான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித
மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதை மாற்று வழியில் எப்படி நிறைவேற்ற
வேண்டுமோ அப்படி நிறைவேற்ற முன்வராமல் சட்டம் என்ற சாட்டையை சுழற்றினால்
பாதிக்கப்படுவது அனைத்து தரப்பு மக்களும் தான் என்கிறார் ஜெயசீலன்.
கிராமப்புறங்களில் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைகள் தான் அப்பகுதி மக்களின் அன்றாட உணவு தேவைகளை நிறைவேற்றும் களமாக இருக்கிறது. இந்த சந்தை வணிகம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் பேரத்தின் அடிப்படையிலேயே கிராம மக்கள் இந்த சந்தையில் தங்களுக்கு தேவையானதை கொள்முதல் செய்வார்கள். இப்படிப்பட்ட நிலையில், இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டப்படி கிராமப்புற சந்தைகள் இயங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பெரும்பாலான சந்தைகள் மூடப்படும் நிலையே ஏற்படும். இதன் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் தாழ்வு நிலைக்கு சென்று விடும் என்கின்றனர் வணிகர்கள்.
No comments:
Post a Comment