Jun 9, 2013

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்ற 75 பேர் மீது வழக்கு வாலிபர் கைது

ஈரோடு
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்டத்தில் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பான்மசாலா, குட்காவுக்கு தடை
குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து கடைகளில் குட்கா, பான்மசாலாவை விற்பனை செய்யக்கூடாது என்று கடையின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கைது
ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு கொங்காளம்மன்கோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் கடையின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகவான்ஜி என்பவரின் மகன் நரியங்காராம் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
75 பேர் மீது வழக்குப்பதிவு
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் ஈரோட்டில் 7 பேர், பவானியில் 10 பேர், கோபிசெட்டிபாளையத்தில் 26 பேர், சத்தியமங்கலத்தில் 18 பேர், பெருந்துறையில் 14 பேர் என 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment