Jun 8, 2013

தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்யக்கூடாது கடைகளில் உள்ள சரக்குகளை ஒரு மாதத்தில் முற்றிலும் அகற்ற அறிவுரை

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைகளில் உள்ள சரக்குகளையும் ஒரு மாதத்தில் முற்றிலும் அகற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடையை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேலு மற்றும் வணிகவரித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, போலீஸ்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
தடை
தமிழ்நாடு அரசு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 23–ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தடைவிதிக்கப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யக்கூடாது. தற்போது கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் குடோன்களில் வைத்து இருக்கும் பொருட்களை ஒரு மாதத்துக்குள் அகற்றி முழுமையாக அழிக்க வேண்டும். குட்கா, பான்மசாலா ஆகியவற்றால் வாய், தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.
மக்கள் இதனை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் குட்கா, பான்மசாலா தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை தூத்துக்குடியிலும் முழுவீச்சில் செயல்படுத்த உள்ளோம். அதிகாரிகள் மக்கள், கடைக்காரர்களை துன்புறுத்தக்கூடாது. ஏதேனும் துன்புறுத்தியதாக புகார்கள் வந்தால், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிர கண்காணிப்பு
பள்ளி, கல்லூரிகள், ஆஸ்பத்திரி அருகே பான்மசாலா விற்பனை செய்யப்படாமல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு தடுக்கப்படும். தடையை மீறி விற்பனை செய்தால், உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்படும்.இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

பான்மசாலா பொருள்கள் விற்போர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

தமிழக அரசின் தடையை மீறி  பான்மசாலா மற்றும் குட்கா பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருள்களை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் ஆஷிஷ்குமார் பேசுகையில்,  தமிழக முதல்வர் 8.5.2013-ல் குட்கா, பான்மசாலா போன்ற பொருள்களை தமிழகத்தில் விற்பனை செய்யக் கூடாது என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு 23.5.2013-ல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாநகராட்சிப் பிரதிநிதி, மாவட்ட வணிக வரி அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இந்த அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு குட்கா, பான்மசாலா பொருள்களின் விற்பனையை தடைசெய்தும், அவற்றை பறிமுதல் செய்தும்,  பின்னர் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொள்வர். அரசின் தடை உத்தரவு இருப்பதால் பான்மசாலா மற்றும் குட்கா பொருள்களை விற்பனை செய்வதை கடைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். யாரேனும் கள்ளச்சந்தையில் இப்பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ம. ஜெகதீஸ் சந்திரபோஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் கே. தங்கவேலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment