Jun 8, 2013

50 கடைகளில் ஆய்வு ரூ.15,000 மதிப்பு குட்கா பான்பராக் பறிமுதல்


சேலம்: சேலத்தில், 50 கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா, பான்பராக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வரும், 22ம் தேதிக்கு மேல் போதை வஸ்துகளை விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மே, 23ம் தேதி முதல் பான்பராக், குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக கலெக்டர் தலைமையில் போதை வஸ்து விற்பனை தடை மற்றும் பதுக்கி வைத்துள்ளவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நேற்று சின்ன கடை வீதி, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள டீ கடை, காஃபி பார், மளிகை கடைகள் என, 50 கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். கடைகளில் பான்பராக், பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம், 15ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகளை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா பறிமுதல் செய்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
அதில், இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், மே, 23ம் தேதி முதல், போதை வஸ்துகள் விற்பனை செய்வது தடை செய்து உத்தரவிட்டுள்ளது. வரும் 22ம் தேதிக்குள் முழுவதுமாக கடைகளில் போதை வஸ்துகளை அப்புறப்படுத்திட வேண்டும். மீறி போதை வஸ்துகளை வைத்து விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து, வியாபாரிகளிடம் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் போதை வஸ்துகள் விற்பனை கண்டறிந்து, பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment