‘‘இதுல, கடலை எண்ணெய் எதுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?’’ - நாம் பெரும்பாலும் வாங்கும் ஐந்து வகை எண்ணெய் பாக்கெட்களை காட்டி நம்மிடம் கேட்கிறார் சந்தனராஜன்... கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உணவுப் பிரிவு இயக்குநர். ‘‘அதான் லேபிள்லயே தெளிவா போட்டிருக்கே சார்...’’ என்றால் புன்னகைக்கிறார்.
‘‘லேபிள்லதான் கடலை எண்ணெய்னு போட்டிருக்கு. ஆனா, பாக்கெட் உள்ள இருக்கறது 50 சதவீதம் பாமாயிலும், 50 சதவீதம் பருத்தி எண்ணெயும் கலந்த ஒரு எண்ணெய். நாங்க டெஸ்ட் பண்ணினதுல இப்படியொரு ரிசல்ட் வந்திருக்கு!’’ - வருத்தமும் ஆதங்கமுமாகப் பேசுகிறார் அவர். சமீபத்தில், சமையல் எண்ணெய் குறித்து கன்ஸ்யூமர் அசோசியேஷன் செய்திருக்கும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி ரகம்!
‘‘இன்னைக்கு பெரும்பாலான மக்கள் ரீஃபைண்டு ஆயில்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க. ஆனா எப்பவும் நடுத்தர, ஏழை மக்களின் சாய்ஸ் கடலை எண்ணெயும் பாமாயிலும்தான். காரணம், விலை குறைவு! ஆனா, கடலை எண்ணெய்ங்கிற பேர்ல பாமாயிலும், தவிடு எண்ணெயும், பருத்தி விதை எண்ெணயும் கலந்து மோசடி பண்றாங்க. இந்த ஆய்வுல சென்னை, திருச்சி, விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரின்னு ஆறு மாவட்டங்கள்ல, 14 பிராண்ட் கடலை எண்ணெய் சாம்பிள்களை சோதிச்சோம். எதிலுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்லை. அப்புறம் சந்தேகம் வந்து, சூரியகாந்தி எண்ணெய் சாம்பிள்களையும் சோதிச்சோம்.
அதுலயும் வெவ்வேறு எண்ணெய்கள்தான் இருந்துச்சு. இது யதார்த்தமா இங்க நடந்திட்டு இருக்கு’’ என்கிறவர், அந்த அதிர்ச்சி விலகாமல் எண்ணெய் பாக்கெட்டில் இருக்க வேண்டிய விவரங்களைப் பட்டியலிடுகிறார். ‘‘பொதுவா, சமையல் எண்ணெயுடன் 20 சதவீதம் அளவுக்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்துக்கலாம்னு அரசு அனுமதி கொடுத்திருக்கு. ஆனா, யாரும் இந்த விதியை மதிக்கிறதில்ல. அவங்க விருப்பத்துக்கு கலந்துக்கிறாங்க.
அப்புறம், 79 சதவீத பாக்கெட்கள்ல இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்கள்ல லைசென்ஸ் நம்பரே இல்ல. இதோடுதான் எண்ணெய் பாக்கெட்டுகளை வித்துக்கிட்டு இருக்காங்க. அடுத்து, பாக்கெட்ல ‘கலக்கப்பட்ட வெஜிடபிள் ஆயில்’னு லேபிளும், அக்மார்க் தரக் குறியீடும் இருக்கணும். குறிப்பா, இதுல எண்ணெயின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முகவரி, பேட்ச் எண், எண்ணெயின் எடை, உற்பத்தி செய்யப்பட்ட நாள், சிறந்த பயன்பாட்டு நாள், ஆர்ஜிமோன் கலப்படம் இல்லங்கிற உறுதிமொழி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன் படி குறிப்பிடப்பட வேண்டியவைன்னு சில விஷயங்கள் இருக்கு. இதுவும் பெரும்பாலான நிறுவனங்களின் பாக்கெட்கள்ல எழுதப்படல.
மொத்தத்துல, நுகர்வோரைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம அவங்களை ஏமாத்தி பணம் பார்க்குறாங்க. தரமில்லாத எண்ணெயால பொதுமக்கள் பல உடல் உபாதைகளை அனுபவிக்கிறாங்க!’’ என்கிறார் அவர் கவலையாக!சரி, கலப்பட எண்ணெயால் என்னென்ன பிரச்னைகள்? ‘‘நிறைய..!’’ எனத் துவங்குகிறார் மருத்துவர் கு.சிவராமன்.‘‘இப்போ, பருத்தி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் சமையல் எண்ணெயுடன் அதிகமா கலக்குறாங்க. இதுல பிரச்னை என்னன்னா, இப்போ வர்ற பருத்தி விதைகள்ல 98 சதவீதம் மரபணு மாற்றப்பட்ட விதைகளே! அதுல இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. அடுத்து, ரெண்டு எண்ணெயக் கலக்கும் விதத்திலும் பல சிக்கல்கள் இருக்கு.
ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு கொதிநிலை இருக்கு. இதை ‘ஸ்மோக்கிங் பாயின்ட்’னு சொல்வாங்க. ஒரே எண்ணெயை பயன்படுத்தும்போது கொதிநிலை சரியா இருக்கும். ஆனா, ஒரு எண்ணெய் 90 சதவீதமும் ஒரு எண்ணெய் 10 சதவீதமும் கலந்து இருக்குதுன்னு வைப்போம். இந்த எண்ணெைய பொரிக்கப் பயன்படுத்தும்போது 90 சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வந்துடும். ஆனா, பத்து சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வராமலே இருக்கும். இதில் உணவு சமைச்சா, கொதிநிலைக்கு வராத அந்த பத்து சதவீத எண்ணெயால அஜீரணக் கோளாறு ஏற்படும்.
அதுக்காக, எண்ணெயே சாப்பிடாம இருக்க முடியாது. நம் உடலுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு எண்ணெய் சத்துகள் தேவை. இல்லாட்டி வைட்டமின் குறைபாடுகள் வந்துடும். அதனால, இந்த மாதிரி கலப்படத்துல இருந்து தப்பிக்க செக்குல ஆட்டின சுத்தமான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். உடம்புக்கு ஆரோக்கியமானது அதுதான்’’ என்கிறார் அவர் முடிவாக!
இங்கே செக்குகளும் உள்ளன... அங்கே எண்ணெயும் உள்ளது. அவற்றை ஏன் பலரும் நாடுவதில்லை? திண்டுக்கல்லில் இன்றும் பாரம்பரிய முறைப்படி மரச் செக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் மோகனகிருஷ்ணன் இதற்கு விடை தருகிறார்.‘‘செக்கு எண்ணெய்ல இருக்குற சத்துகள் பலருக்கும் தெரியறதில்ல சார். விலைதான் தெரியுது. இன்னைக்கு இயந்திரங்கள் உதவியால கெமிக்கலைப் பயன்படுத்தி எண்ணெயை பிரிச்சு எடுக்குற நிலைமை. அதுல சத்துகள் எல்லாம் காணாமப் போயிடுது. ஆனா, செக்குல எந்த கெமிக்கலும் பயன்படுத்துறதில்ல. கலப்படமும் இருக்காது.
எண்ணெயும் கெட்டியா இருக்கும். பொதுவா, வெளி மார்க்கெட்ல நல்லெண்ணெயை ப்ளீச்சிங் பண்ணி ஒரே கலர்ல கொடுப்பாங்க. ஆனா, செக்குல அப்படியில்ல. எந்தப் பகுதியில எள் விளைஞ்சதோ அதுக்கு ஏத்தபடி கலர் மாறிட்டே இருக்கும். நம்மாளுங்க கொஞ்சம் நிறம் அடர்த்தியா இருந்தாலே ‘அது நல்ல எண்ணெய் இல்லை’ன்னு ஒதுக்கிடுறாங்க. நான் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் மரச் செக்குல ஆட்டிக் கொடுக்குறேன். நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 260 ரூபாய்க்கு விற்கிறேன். இதுக்கு இரண்டரை கிலோ எள் வேணும்.
அதுவே இப்ப 150 ரூபாய். அதில் கொஞ்சம் கருப்பட்டி போட்டு ஆட்டுவோம். இதோட, ஆள் கூலி எல்லாம் சேர்த்தா அடக்க விலையே அவ்வளவு வந்துடும். ஆனா, பாக்கெட் நல்லெண்ணெய் 20, 30 ரூபாய் கம்மியா இருக்கேன்னு கேக்கறாங்க. கடலை எண்ணெய் 150 ரூபாய்க்குக் கொடுக்குறோம். மார்க்கெட்ல இதுல பாதி விலையில கிடைக்குதுனு தயங்குறாங்க. ஒரு கிலோ நிலக்கடலை விலையைவிட கடலை எண்ணெய் விலை எப்படி குறைவா இருக்க முடியும்? இதையெல்லாம் மக்கள் யோசிக்கணும்!’’ என்கிறார் அவர் ஆதங்கமாக.நம்ம ஆரோக்கியம்... நாம்தான் யோசிக்கணும்!
No comments:
Post a Comment