திண்டுக்கல்,அக்.14-திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் கங்காதரன். வியாபாரி. இவர், திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் பொருட்களை சேமித்து வைத்திருந்தார். அந்த குடோனுக்குள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லாரன்ஸ், செல்வம் ஆகியோர் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த புகையிலை பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கருதப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவைகளை, மதுரையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். 2 வார காலத்துக்குள் ஆய்வு முடிவு தெரியவரும். அதன்பின்னர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கங்காதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனை ‘சீல்‘ வைத்து அதிகாரிகள் பூட்டினர். இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment