சேலம்: சேலம், ஐந்து ரோடு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய, பாக்கெட் பேரீச்சம்பழத்தில், புழுக்கள் உயிருடன் நெளிந்ததால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து, உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
சேலம், ஜாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சேலம், ஐந்து ரோட்டில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வழக்கமாக, வீட்டிற்கு தேவையான அனைத்து உணவு பொருட்கள் வாங்குவது வழக்கம். அதன்படி, கடந்த, 8ம் தேதி, சூப்பர் மார்க்கெட்டில், வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கினார். அதில், 200 கிராம் எடையுள்ள, 'லயன்' கம்பெனி பேரீச்சம்பழம் பாக்கெட் வாங்கியுள்ளார். பின், வீட்டிற்கு சென்று, பேரீச்சம் பழம் பாக்கெட்டை திறந்து பார்த்த போது, அதில் புழுக்கள் மற்றும், வண்டுகள் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று, விளக்கம் கேட்டுள்ளார். கடையினர், 'இந்த பாக்கெட் விற்பனை தேதி முடியவில்லை; டீலர்கள் கொடுப்பதை விற்பனைக்கு வைத்துள்ளோம்' என, தெரிவித்துள்ளனர். பின்னர், அவர், சம்பந்தப்பட்ட டீலரிடம், ஃபோன் மூலம் விளக்கம் கேட்டார். அவர்கள், 'இது இயற்கை உணவு என்பதால், பூச்சிகள் வரத்தான் செய்யும்; ஒரு சில பாக்கெட்களில் தவறு நடந்திருக்கலாம்; ஒன்றும் செய்ய முடியாது' என, அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். விரக்தியடைந்த தட்சணாமூர்த்தி, இதுகுறித்து, நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் புகார் செய்தார். இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், ''சம்மந்தபட்ட சூப்பர்மார்க்கெட்டில் ஆய்வு செய்து, உணவு பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளோம்; ஆய்வு முடிவை வைத்து, நடவடிக்கை எடுக்கபடும்,'' என்றார்.
*இதேபோல், சேலம், அம்மாபேட்டை, சடகோபன் நகர் பகுதியை சேர்ந்த விநோத்குமார் என்பவர், கடந்த, 10ம் தேதி, இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், தன் குழந்தைகளுக்கு குவாக்கர் ஓட்ஸ் வாங்கியுள்ளார். அதில், புழுக்கள் மற்றும் சிறுசிறு வண்டுகள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி மூலம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினோத்குமார் புகார் செய்துள்ளார்.
No comments:
Post a Comment