கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால் ஏற்கெனவே "சீல்' வைக்கப்பட்ட தொழிற்சாலைகளை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் திறக்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதவிர, ஈரமான மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதற்கு தேவையான அரசாணைகளை ஒரு வாரத்தில் அரசு பிறப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி வெள்ளாளப்பட்டி விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் செயலர் ஆர்.சந்திரசேகரன் தொடுத்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்த பிறகே பதப்படுத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் சிறிய உற்பத்தியாளர்கள் மரவள்ளிக் கிழங்கின் தோலை உரிக்காமலேயே, பெரிய உற்பத்தியாளர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
அதனால், ஜவ்வரிசியை வெள்ளையாக்குவதற்காக தீங்குவிளைவுக்கும் ரசாயனத்தைக் கலக்கின்றனர் என மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தையில் ஜவ்வரிசி விற்பனைக்கு வருவதற்கு முன்பு 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பரிசோதனைகளில் குறிப்பிட்ட தரத்துடன் ஜவ்வரிசி இல்லாவிட்டால், அவை உற்பத்தியாளர்களுக்கே திருப்பித் தரப்படுகிறது. பின்னர், அவற்றை உற்பத்தியாளர்கள் தள்ளுபடி விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
எனவே, பரிசோதனையில் ஜவ்வரிசி சரியில்லை என்று தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, அந்த ஜவ்வரிசி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேலும், ஈரமான மரவள்ளிக் கிழங்கு மாவினை சந்தையில் விற்பதாலும் பிரச்னை ஏற்படுகிறது. இந்த மாவு குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, ரசாயனம் கலந்து விற்கப்படுகிறது. எனவே, ஈரமான மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு தேவையான அரசாணைகளை ஒரு வாரத்தில் அரசு பிறப்பிக்க வேண்டும்.
கலப்பட ஜவ்வரிசி உற்பத்தி செய்ததால் ஏற்கெனவே "சீல்' வைக்கப்பட்ட தொழிற்சாலைகளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் திறக்கக்கூடாது. அவ்வாறு, "சீல்' வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் தொடர்பான வழக்குகளையும் பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment