ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறோம். பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருப்பவரோ, எதிர் டேபிளில் உட்கார்ந்திருப்பவரோ சாப்பிட்டுக்கொண்டே ஒவ்வொரு கவளத்துக்கும் இடையே மென்பானம் ஒன்றை மடக்மடக்கென்று சாப்பாட்டுடன் சேர்த்து உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார். இன்றைக்கு இது சாதாரண விஷயமாகிவிட்டது. ஹோட்டல்களில்தான் என்றில்லை, போன் செய்தவுடன் வீட்டுக்கு அதிவேகமாக வந்துசேரும் துரித உணவு வகைகள் பலவற்றுக்கும் மென்பானங்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இப்படிக் குடிநீரின் இடத்தை மென்பானம் பிடித்து நாளாகிவிட்டது.
இந்த மென்பானங்களில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பது தொடர்பாக டெல்லி சி.எஸ்.இ. (அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) வெளியிட்ட ஆய்வு முடிவு, 2003-ல் நாடாளுமன்றத்தை உலுக்கியது. மென்பானத்தில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைத் தாண்டி, இன்னொரு முக்கியமான விஷயமும் அந்த ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டது. அது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கோகோ கோலா, பெப்சி மென்பான மாதிரிகளையும் சி.எஸ்.இ. பரிசோதித்தது. ஆனால், அங்கு விற்பனை செய்யப்படும் இதே நிறுவனத்தின் தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இல்லை என்பதுதான்.
எவ்வளவு குடிக்கிறோம்?
பாட்டில் குடிநீரில் உள்ள பூச்சிக்கொல்லிகள் பற்றி கடந்த இரண்டு வாரங்களாகப் பார்த்தோம். பாட்டில் குடிநீருக்கான மூலப்பொருளான அதே நிலத்தடி நீர்தான், மென்பானங்களின் அடிப்படை மூலப்பொருள். நம் நாட்டில் பாட்டில் குடிநீர், மென்பானங்கள் இரண்டையும் ஒரே நிறுவனங்கள்தான், பெரும்பாலும் உற்பத்தி செய்கின்றன. ஆனால் மென்பானம் குடிப்பது, பாட்டில் குடிநீரைவிட ஆபத்தானது, ஏன்?
இந்த இடத்தில் ஒரு சின்ன பொருளாதாரக் கணக்கு, நம் புரிதலை இன்னும் எளிமையாக்கும். தேசிய அளவில் பாட்டில் குடிநீர் உற்பத்தியில் புழங்கும் பணம் ரூ. 1,000 கோடி. ஆனால், மென்பானத் தொழிலில் புழங்கும் பணமோ ரூ. 6,000 -7,000 கோடி என்ற கணிக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டில் சராசரியாக 660 கோடி பாட்டில் மென்பானங்களை இந்தியர்கள் குடிக்கிறார்கள். இதுகூட 10 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குதான். மொத்தம் 1,175 கோடி லிட்டர் மென்பானம் விற்பனையாவதாக 2013-ம் ஆண்டு கணக்கு சொல்கிறது.
12 நிறுவனங்கள்
இவ்வளவு பணம் புழங்கும் ஒரு மிகப் பெரிய துறை சார்ந்த கண்காணிப்பும், ஆய்வும் அத்தியாவசியம். ஆனால், எப்போதும்போல் அரசு பாராமுகமாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் புதுடெல்லியில் உள்ள சி.எஸ்.இயின் மாசுபாடு கண்காணிப்பு ஆய்வகம் மென்பானங்கள் தொடர்பான ஆய்வகப் பரிசோதனைகளை 2003-ம் ஆண்டில் மேற்கொண்டது. பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பாக பி.ஐ.எஸ். (இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு), மத்திய பொது சுகாதார, சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு ஆகியவற்றின் (Central Public Health and Environmental Engineering Organisation - CPHEEO) வழிகாட்டுதல்களின்படி குடிநீர்-தொடர்புடைய தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கக் கூடாது.
இது திட்டவட்ட விதிமுறையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ‘பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கக் கூடாது' என்பதை இந்த நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இந்த வழிகாட்டுதலையே விதிமுறையாக எடுத்துக்கொண்டு சி.எஸ்.இ. பரிசோதனைகளை நடத்தியது.
கோகோ கோலா, பெப்சி என மிகவும் பிரபலமான இரண்டு நிறுவனத் தயாரிப்புகள் அல்லாமல், அனைத்து மென்பானங்களும் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான மேற்கண்ட இரண்டும் இந்திய மென்பானச் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தியாவில் ஏற்கெனவே பிரபலமாக இருந்த வேறு பல மென்பான நிறுவனங்களையும், அவற்றின் தயாரிப்புகளையும் இவை கையகப்படுத்திவிட்டன. சி.எஸ்.இயின் ஆய்வு இந்த இரண்டு நிறுவனத் தயாரிப்புகளை மட்டும் குறிவைப்பது போலத் தோன்றலாம். ஆனால், அது உண்மையில்லை. டெல்லியில் விற்பனை செய்யப்படும் 12 நிறுவனங்களின் மென்பானங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஏன் ஐரோப்பிய விதிமுறைகள்?
மென்பானத்தில் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கக்கூடிய அளவு தொடர்பாக திட்டவட்டமான விதிமுறைகளுக்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமே தேசிய அளவில் இருக்கின்றன. இதனால், குடிநீர்-மென்பானம் தொடர்பான பரிசோதனைகளுக்கு வெளிநாட்டு விதிமுறைகளையே பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதிலும் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் விதிமுறைகள் இந்தியாவுக்குப் பொருந்தவில்லை. ஏனென்றால், இந்திய பூச்சிக்கொல்லிகள் அனைத்தையும் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டுள்ளன, தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் குடிநீர், அத்துடன் தொடர்புடைய மென்பானம் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதற்கான அதிகபட்ச அளவு தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. குடிநீர், மென்பானத்தில் மனிதர்களை பாதிக்கும் எந்த ஒரு வேதி நச்சும் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய விதிமுறைகள் உள்ளன. அதனால், தனது பரிசோதனைக்கு அடிப்படையாக அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு சி.எஸ்.இ. செயல்பட்டது.
ஐரோப்பிய பொருளாதாரக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குடிநீரில் அதிகபட்சமாக ஒரு தனிப்பட்ட பூச்சிக்கொல்லியின் அளவு ஒரு லிட்டரில் 0.0001 மில்லி கிராமும், பல்வேறுபட்ட பூச்சிக்கொல்லிகளின் மொத்த அளவு ஒரு லிட்டரில் 0.0005 மில்லி கிராமும் இருக்கலாம். அது மட்டுமல்லாமல் ஆல்ட்ரின், டைல்டின், ஹெப்டாகுளோர், ஹெப்டாகுளோர் ஈபாக்சைடு போன்றவை மேற்கண்ட அளவைவிடவும் குறைவாக, ஒரு லிட்டருக்கு 0.00003 மில்லிகிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இந்த விதிமுறைகள் பின்பற்றுவதற்கும் பரிசோதிப்பதற்கும் எளிதாகவும் உள்ளன.
உயிருக்கு ஆபத்து
தங்களுடைய பரிசோதனையில் 16 ஆர்கனோகுளோரின், 12 ஆர்கனோபாஸ்பரஸ், 4 செயற்கை பைரித்ராய்ட்ஸ் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டதாக சி.எஸ்.இ. ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த எச்சங்கள் அனைத்துமே இந்திய விவசாயத்திலும் வீடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட லிண்டேன், டி.டி.டி., அவற்றின் மெட்டபாலைட்ஸ் துணை வகைகளான குளோர்பைரிஃபாஸ், மாலத்தியன் போன்றவை மனித உடல்நலனுக்கு ஆபத்தானவை. இவை மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட அளவு சேர்ந்த பிறகு, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்குச் செல்லும். எந்த ஒரு பூச்சிக்கொல்லியும் உடனடியாக மனிதனைக் கொன்றுவிடக்கூடிய விஷம் என்று சொல்ல முடியாது.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகக் காலாகாலத்துக்கும் நம் உடலில் அவை சேர்வதால், நீண்டகால உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பதை சமீபகால ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. பூச்சிக்கொல்லிகளுடன் இருப்பதும், அவற்றுக்கு அருகே வாழ்வதும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குலைக்கக்கூடியது (immunosuppressive effect) என்பதும், இதன் விளைவாகப் புற்றுநோய், ஆஸ்துமா போன்றவை தூண்டிவிடப்படுவதாகவும் பல ஆராய்ச்சிகள் ஆவணப்படுத்தியுள்ளன.
அரசு - சி.எஸ்.இ. ஆய்வு முடிவுகளுக்கு இடையிலான வேறுபாடு தொடர்பான சர்ச்சை, வயலில் பூச்சிகளை விரட்ட பூச்சிக்கொல்லியாகத் தெளிக்கப்பட்ட மென்பானங்கள், மென்பானங்களுக்கு என்ன மாற்று போன்றவற்றை அடுத்த முறை பார்ப்போம்.
No comments:
Post a Comment