தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெயரளவுக்கு சோதனை நடத்தி பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், தடையை மீறி, போலீஸார் ஆசியுடன், லாட்டரி சீட்டு விற்பனை நடப்பது போல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆசியுடன், போதை வஸ்துக்களின் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் மிகுந்த, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போதை வஸ்துகளின் விற்பனை அதிகம் நடக்கிறது. சில இடங்களில், தடையை காரணம் காட்டி, கூடுதல் விலைக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது, மொத்த விற்பனையாளர் யார், சில்லறை விற்பனையாளர் யார், பதுக்கி வைக்கப்படும் இடம் எது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிந்தும், அதிகாரிகள் தங்களின் சுய லாபத்துக்காக, நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தலைலையிலான குழுவினர், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சோதனை செய்தனர். இதில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது பெயரளவுக்கு, நடத்தப்பட்ட சோதனை என, பொதுமக்கள் மத்தியில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்டநியமன அலுவலர் தினேஷ் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூன் மாதம் வரை, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் என, இரண்டு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கண்காணிப்பு மற்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment