சேலத்தில் சர்க்கரை கலந்து தயாரித்ததாக சுமார் 45 டன் வெல்லத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தீவட்டிப்பட்டி, மேச்சேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் வெல்லம் சேலம் செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள கரும்பு வெல்ல உற்பத்தியாளர் சங்கக் கட்டடத்தில் ஏலம் விடப்படுகிறது.
இங்கு ஏலம் விடப்படும் வெல்லத்தில் அதிகளவில் சர்க்கரை, ரசாயனப் பொருள்கள் கலந்து விற்பதாகப் புகார் வந்தது. இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையில், வெல்ல மண்டியில் ஜூலை 9 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இதில், 7 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 8.4 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை சட்ட விதிமுறையின்கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும், சர்க்கரை கலந்த வெல்லத்தை விற்கக் கூடாது என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இதனிடையே, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள் செவ்வாய்ப்பேட்டை வெல்ல ஏல மண்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 35 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சர்க்கரை கலந்த சுமார் 45 டன் வெல்லத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், சர்க்கரை கலந்த வெல்லத்தை தண்ணீரில் போட்டு ஆய்வு செய்தனர். இதில் சர்க்கரை அதிகமாக கலந்து இருந்ததால், வெல்லம் தண்ணீரில் கரைந்தது. இதையடுத்து, சுமார் 45 டன் வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா கூறியது:
கரும்பு வெல்லம் தயாரிக்கும்போது சர்க்கரையைக் கலக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வெல்ல உற்பத்தியாளர்கள் தொடர்ந்து சர்க்கரை மற்றும் ரசாயனப் பொருள்களைக் கலந்து வெல்லம் உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
தற்போது, சர்க்கரை நோயாளிகள், வெல்லத்தைச் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால், வெல்லத்தில் சர்க்கரை கலப்பதால், சர்க்கரை நோயாளிகளின் உடல் நலம் பாதிக்கக் கூடும்.
எனவே, சர்க்கரை, ரசாயனப் பொருள்கள் கலந்த கலப்பட வெல்லத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக் கோளாறு குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். கரும்புச் சாறு கலந்த வெல்லத்தை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment