கோவை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறி, பழங்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை, நடமாடும் ஆய்வகம் வாயிலாக பரிசோதனைக்கு உட்படுத்தும் புதிய நடைமுறையை, கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக-கேரள எல்லையான வாளையாறில், ஏழு சோதனைச்சாவடிகள் வரிசையாக அமைந்துள்ளன. இவற்றை கடந்து செல்லும் சரக்கு வாகன டிரைவர்கள், கொண்டு செல்லப்படும் சரக்கு குறித்த தகவல், பற்றுச்சீட்டு(இன்வாய்ஸ்) மற்றும் இ-டிக்ளரேசன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.சோதனைச்சாவடி பணியாளர்கள், வாகனத்தில் இருக்கும் சரக்குக்கும், ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் சரக்குக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று சரிபார்த்து, அதன் பின் சோதனைச்சாவடியை கடக்க அனுமதிப்பர்.
காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு இல்லாமல் இருந்த இந்த நடைமுறையை, இம்மாதம், 8 ம் தேதி முதல், கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க, இப்புதிய நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
ஆய்வு நடப்பது எப்படி?
ஆய்வை சோதனைச்சாவடியிலுள்ள பணியாளர்கள் மேற்கொள்வதில்லை. காய்கறிகளை பரிசோதிக்க, கேரள அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தணிக்கைத்துறை சார்பில், 'நடமாடும் ஆய்வகம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோட்டில் காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்தி, மாதிரி எடுத்து அதில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அவ்வாறு இருந்தால், உடனடியாக சோதனைச்சாவடிகளுக்கும், அம்மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த சரக்கு திருப்பி அனுப்பப்படும். இந்நடைமுறையை, கேரள அரசு முன்பே தெரிவித்து விட்டது.
இதனால் தமிழக - கேரள எல்லையான வாளையாறு, கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்தாபுரம், வேலந்தாவளம் ஆகிய ஆறு சோதனைச்சாவடிகளில் காய்கறி மற்றும் உணவுப்பொருட்களை கடும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
இது குறித்து வாளையாறு சோதனைச்சாவடி வணிகவரித்துறை அலுவலர் ஹரி கூறியதாவது:இரவு, 10:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் வருகின்றன. காய்கறிகளை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்கள், '8 எப்' படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.கேரளாவில் திங்களன்று மார்க்கெட் என்பதால், ஞாயிற்றுக்கிழமை, 400-500 வாகனங்களில் காய்கறிகள் வரும். மார்க்கெட்டில் உணவு பரிசோதனை அதிகாரியின் சோதனைக்கு காய்கறி உட்படுத்தப்பட்டால், வியாபாரி சமர்ப்பித்த ஆவணங்களின் வாயிலாக, காய்கறி உற்பத்தி செய்த உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இதுவரை நுாடுல்ஸ் பாக்கெட் ஏற்றிச் சென்ற ஒரு லாரிக்கும், வெண்டை மற்றும் கத்தரி ஆகிய காய்கறிகளை ஏற்றி வந்த வாகனத்துக்கும், அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, ஹரி கூறினார்.
இது குறித்து வணிக வரித்துறை ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில், ''வாகன சோதனையின் போது, ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறோம். எங்கிருந்து சரக்கு வருகிறது, எங்கு செல்கிறது, வாகனப்பதிவு எண், உற்பத்தியாளர் மொபைல் போன் எண் ஆகியவற்றை பதிவு செய்கிறோம். இந்த பதிவு அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பதிவாகும். எந்த அதிகாரியும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்,'' என்றார்.
டிரைவர் பைசல் கூறியதாவது: கேரளாவுக்குள், இனி 24 மணி நேரமும் காய்கறி கொண்டு செல்ல முடியாது. காய்கறி வாகனங்களும் மற்ற வாகனங்களை போல் சோதனைச்சாவடியில், காத்திருக்க வேண்டும். '8எப்' படிவத்தை சமர்ப்பிக்காத வாகனங்களை கேரளாவுக்குள் அனுமதிப்பதில்லை.
டிரைவர் ஜியாவுதீன் கூறியதாவது: கோவையிலிருந்து காய்கறி வாகனத்தில் புறப்படும் போதே, ஆன்லைனில் படிவம் '8எப்' ஐ பூர்த்தி செய்து அனுப்பி விட்டால், அனுமதிச்சீட்டை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதை சோதனைச்சாவடியில் பெற்று வேகமாக, சோதனைச்சாவடியை கடக்கலாம். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அதனால் தான் நள்ளிரவில், காய்கறிகள் கொண்டு செல்ல சோதனைச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கறிவேப்பிலை மீது சந்தேகம்:
கேரளா செல்லும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள், கேரள சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி கோபாலபுரம் செக்போஸ்டில், வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டன. கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? போன்ற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. காய்கறிகள் பரிசோதிக்கப்படவில்லை.கேரளா மீனாட்சிபுரம் மற்றும் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள, கேரள வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிமாநிலங்களில் இருந்து, கேரளாவுக்கு, விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள், பழங்களில், நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலையடுத்து, கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காய்கறி மொத்த விற்பனைக்கடைகளில் மாதிரிகளை சேகரிக்கின்றனர்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி, கேரளாவின் அனைத்து பகுதியிலும் காய்கறி வண்டிகளை நிறுத்தி, மாதிரி சேகரிக்கின்றனர். காய்கறி எங்கிருந்து வந்துள்ளது, யாருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்ற விபரங்களை எங்களிடம் கேட்டு பெறுகின்றனர்.
குறிப்பாக கறிவேப்பிலை மற்றும் கோவைக்காயில் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமுள்ளதாக தெரிவிக்கின்றனர். வணிகவரி சோதனை சாவடிகளில் காய்கறிகளின் மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கேரள மாநிலம் கோவிந்தாபுரம் செக்போஸ்ட் வழியாக, தமிழகத்திலிருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரி சோதனையிடப்படுகிறது. லாரி டிரைவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பஷீர் கூறுகையில், ''இதுவரை லாரியை நிறுத்தி காய்கறி மாதிரி சேகரிக்கப்படவில்லை. வழக்கமான ஆவண பரிசோதனை மட்டுமே நடக்கிறது,'' என்றார்.
No comments:
Post a Comment