கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரில், மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற சில்லி சிக்கன், மீன் வறுவல் போன்ற உணவு வகைகள் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளதால், இதனை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு செய்து தடைசெய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹோட்டல்கள், சாலையோர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள் போன்றவற்றில் தரமான, சுகாதாரமான உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு நியமண அலுவலகத்தில், கடை உரிமையாளர்கள் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அனுமதி பெற்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டும்.கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு சாலை, கார்னேசன் திடல் ரோடு, சந்தைபேட்டை ரோடு, சென்னை சாலை, பழையபேட்டை, லண்டன்பேட்டை, ராயக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில், மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைகளில் சில்லி சிக்கன் கடைகள், டிபன் கடைகள் மற்றும் மீன் கடைகள் வைக்கப்படுகிறது.இந்த கடைகளில், தரமற்ற எண்ணெய் கொண்டு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு வகைகளை தயாரிக்க பயன்படும் இதர பொருட்களும் தரமற்றதாகவே உள்ளது. இவ்வாறு தரமற்ற உணவு பொருட்களை வாங்கி உபயோகிக்கும் பொதுமக்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, இந்த உணவு வகைகளை சாப்பிடுவோருக்கு வயிறு சம்மந்தமான நோய்கள் தாக்கி வருகிறது. அப்போதைக்கு ருசியாக உள்ளதாலும், காரமாக உள்ளதாலும் இரவில் மது குடிப்போர், இவ்வாறான உணவு வகைகளை, அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இரவில் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில்தான், இவர்களுக்கு அந்த உணவின் தரம் குறித்து தெரியவருகிறது. இந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் சில்லி சிக்கன், மீன் ஆகியவற்றை, தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு, விரைவில் அல்சர் வருகிறது.இது குறித்து, நகராட்சி கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் உண்வு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, பல தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். ஆனால், தற்போது மீண்டும் சாலையோரங்களில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கிருஷ்கிரி நகரில் அதிகரித்துள்ளது.எனவே, கிருஷ்ணகிரி நகரில், இரவு நேரங்களில் சாலையோரங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர், முறைபடி உணவு பாதுகாப்பு நியமண அலுவலர்களிடம் இருந்து அனுமதி வாங்கியுள்ளார்களா என்பதையும், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் தரமானதாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பததையும் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகளை மூடவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment