"உப்பிட்டவரை உள்ளளவும் நினை', "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'- இது போன்ற பழமொழிகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம். எனினும், உப்புக்கும் அதை உற்பத்தி செய்து விற்பவர்களுக்கும் வந்த சோதனைகளைப் பலர் அறிய வாய்ப்பில்லை.
நாடு விடுதலை அடைந்த பின் உப்புத் தொழில் மிகுந்த வளர்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாட்டில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குஜராத் மாநிலமே.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது. ஆனால், குஜராத்தை போல கோடிக்கணக்கான முதலீட்டுடன் செய்யப்படாமல் இங்கு சிறு சிறு உப்பளங்களாகப் பாத்திகட்டி உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தி ஆண்டுக்கு இரண்டு கோடி டன். இதில் குஜராத் மாநிலத்தின் பங்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் டன். ராஜஸ்தான் மாநில உற்பத்தி இருபது லட்சம் டன்.
தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு முப்பது லட்சம் டன்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கடற்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆழ்குழாய் அமைத்து நீர் இறைத்து பாத்திகளில் தேக்கி சூரிய ஒளியில் உப்பு படிந்து வாரப்படுகிறது.
முழுக்க முழுக்க இயற்கையை நம்பியே இந்த உப்பு விவசாயம் செய்யப்படுகிறது. உப்பு விளைந்து வாருவதற்குத் தயார் நிலையில் இருக்கும்போது மழை பெய்தால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைவார்கள்.
தமிழகத்தில் உப்பு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நேரடியாக உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 40,000 பேர். பொட்டலம் இடுதல் மற்றும் வாகனங்களில் ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டுளோர் 60,000 பேர்.
ஆண்டாண்டுகாலமாக இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உப்பை உணவுக்குப் பயன்படுத்தித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
அத்தகைய உப்பைப் பயன்படுத்தியதால் அவர்கள் ஆரோக்கியம் கெட்டுவிட்டதாக எந்த சான்றும் இல்லை. இந்நிலையில், அரசு சில சட்டதிட்டங்களை இயற்றி உப்புத்தொழிலை நசுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உப்பில் அயோடின் கலந்துதான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றி பல ஆண்டுகளாகிவிட்டன. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
நீதிபதிகள் இந்தச் சட்டப்பிரிவு செல்லாது என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளபோதிலும் இறுதித்தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அஷோக் டி. ஜெய்சிங்கானி என்ற சத்துணவு ஆராய்ச்சியாளர் கூறுவதைச் சுருக்கமாகக் காண்போம்.
"அதிக அளவு அயோடின் உட்கொள்வது எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக அமைகிறது. அதன் காரணமாக அகால மரணம் சம்பவிக்கிறது. பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு அவர்கள் அன்றாடம் உண்ணும் உணவிலிருந்தே அவர்களுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைத்துவிடும். அதற்கு அயோடின் கலக்காத சாதாரண உப்பே போதுமானது.
உஷ்ணப் பிரதேசமான நமது நாட்டில் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பை உண்பது, ஹைப்போதைரோயிடிசம், வயிற்றுப்போக்கு, கூடுதல் வியர்வை சுரத்தல், நீர்வற்றிப் போதல், விரைவாக எடை குறைவது, ஆஸ்துமா போன்ற மூச்சுத் திணறல், சர்க்கரை நோய், சிறுநீரகக் கல், தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு வியாதிகளுக்கும் காரணமாகிவிடும்.'
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ஏன் நமது அரசு விரைந்து முடிக்கத் தயக்கம் காட்டுகிறது என்று விளங்கவில்லை.
உப்பில் கலப்படமா? முன்பிருந்த கலப்படத் தடைச் சட்டத்திலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006}லும் உப்பிற்காகக் குறிப்பிட்ட தரம் இல்லையெனில், அது கலப்படம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
இயற்கையாக விளையும் உப்பில் அரசு நிர்ணயித்த தரம் இல்லையெனில், யாரைக் குற்றம் சொல்வது? சட்டப்படி உணவுக்கான சாதாரண உப்பில் சோடியம் குளோரைடு என்ற வேதிப்பொருள் 96 விழுக்காடு இருக்க வேண்டும்.
ஆனால், தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பில் பெரும்பாலும் 92 விழுக்காடுக்கு மேல் இருப்பதில்லை. அதிலும் வடக்கு அளத்தில் ஒரு விகிதமும் தெற்கு அளத்தில் ஒரு விகிதமும் இருப்பதைக் காணலாம். இந்த வேறுபாட்டுக்கு அங்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அடர்த்தியும் பாத்தியில் உள்ள மண்ணின் தன்மையுமே காரணமாகும்.
சோடியம் குளோரைடு 96 விழுக்காட்டுக்குக் குறைவாக உள்ள உப்பை விற்பனை செய்யும் வணிகர்மீது கலப்படம் செய்த குற்ற வழக்கு தொடரப்படும். ஒரு விவசாயிபோல் இயற்கையை நம்பி உற்பத்தி செய்யும் உப்பைக் கலப்படம் செய்ததாகக் கூறி வழக்குத் தொடர்வது நியாயமா?
சரி, 96 விழுக்காட்டுக்குக் குறைவாக இருந்தால் அதை உட்கொள்ளும் நபர் எவ்வாறு பாதிக்கப்படுவார் என்ற வினா எழுப்பினால் அதற்குப் பதில் கிடையாது.
இதில் விந்தை என்னவென்றால், தென்கொரியாவிலிருந்து 85 விழுக்காடு சோடியம் குளோரைடு மட்டுமே உள்ள உப்பு வேண்டும் என்று ஆர்டர் வந்தும் நமது நாட்டுச் சட்டப்படி 96 விழுக்காடுக்குக் குறைந்த உப்பு ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற தடையிருப்பதால் நமது ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மொத்தம் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் ஆண்டுக்கு 8,88,300 டன் உற்பத்தி செய்கின்றனர். அவர்களால் கண்டிப்பாக 96 விழுக்காடு சோடியம் குளோரைடு உள்ள உப்பை உற்பத்தி செய்ய இயலாது.
என்று தணியும் இந்த உப்புக்கு வந்த சோதனை?
No comments:
Post a Comment