கோவை, ஜன.3:
கோவை சொக்காம்புதூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்பராக் புகையிலை பொருட்களை வணிகவரித்துறையினர் அதிரடி சோதனையில் கைப்பற்றினர்.
இது குறித்து கோவை கோட்ட செயலாக்க பிரிவு துணை கமிஷனர் சங்கரநாராயணன் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட சில வகை புகையிலை பொருட் கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை மீறி கோவையில் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கோவை கோட்ட வணிகவரி செயலாக்கம் இணை ஆணையர் மரியம் உத்தரவின் பேரில், எனது தலைமையிலான அதிகாரிகள், வணிகவரித்துறை யின் செயலாக்க பிரிவின் கிணத்துக்கடவு ரோந்து படையினர் மற்றும் செல்வபுரம் போலீசார் ஆகியோர் நேற்று முன்தி னம் கோவை சொக்காம்புதூர், சண்முகநகரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிடங்கில் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றோம்.
அப்போது கிடங்கு பூட்டப்பட்டிருந்தது. குடோன் உரிமையாளர் தங்கவேல் அனுமதியுடன் குடோன் பூட்டை உடைத்து அதன் உள்ளே இருந்த, அரசால் தடை விதிக்கப்பட்ட பான்பராக் பண்டல்களை பறிமுதல் செய்தோம். இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இப்பொருள்களின் உரிமையாளர் சேட் என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கோவை வணிகவரி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அவர்கள் அப்பொருட்களை தரப்பரிசோதனை செய்து தடை செய்யப்பட்ட பொருள்களை உறுதி செய்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பார்கள்.
இது போல், கோவை கோட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கும்பட்சத்தில் அவற்றை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் விற்கப்படும் சிகரெட் மற் றும் புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்கீழ் கடந்த நவம்பர் முதல் 30 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வணிகர்கள் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் உரிய ஆவணங்கள் இன்றி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து தமிழகத்திற்குள் விற்பனை செய்து அரசிற்கு வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
இதை தடுத்து அரசிற்கு வருவாயினை உறுதி செய்யும் பொருட்டு வணிகவரித்துறையின் கோவை கோட்ட செயலாக்க பிரிவு அதிகாரிகள் ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள், கிடங்கு ஆகியவற்றில் கடந்த 2 வாரங்களாக ஆய்வு நடத்தினோம். அப்போது வரி ஏய்ப்பு செய்த புகையிலை பொருட்களுக்கு ரூ.60.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இச்சோதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு கோவை கோட்ட வணிகவரி செயலாக்கம் துணை கமிஷனர் சங்கரநாராயணன் கூறினார்.
No comments:
Post a Comment