இளம்பிள்ளை, ஜன.21:
இளம்பிள்ளை பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு குழுவினர், பேக்கரி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதி குளிர்பானங்களை கைப்பற்றி அழித்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, கல்பாரப்பட்டி, இடங்கணசாலை வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிரஞ்சீவி, ரவி, இளங்கோ உள்ளிட்டோர் நடத்திய இந்த சோதனையின்போது பேக்கரி கடைகளில் பிரட் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை உலரவைக்க தாள்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அங்கிருந்த காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
டீக்கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், கலப்பட டீத்துள் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மளிகை கடையில் பொட்டலம் போடுவதற்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சாயமேற்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.
இதேபோல், அங்குள்ள சேகோ ஆலையிலும் அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனை யால் நேற்று இளம்பிள்ளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பிள்ளை பகுதியில் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர் பேக்கரி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதி குளிர் பானங்களை கைப்பற்றி அங்கேயே அழித்தனர்.
No comments:
Post a Comment