Jan 21, 2015

கம்பம் பகுதியில் 25 கிலோ பான் மசாலா பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு பிரிவு துறையினர் அதிரடி

கம்பம், ஜன.21:
கம்பம் பகுதியில் 25 கிலோ பான் மசாலா பொருட்கள், புகையிலை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு பிரிவு துறையினர் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
கம்பம் பகுதியிலுள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதை மற்றும் நச்சுப்பொருள் கலந்த போதைப்பாக்கு மற்றும் புகையிலை விற்கப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாச்சலம் உணவு பாதுகாப்பு பிரிவு துறையினரை நேற்று கம்பம் பகுதியில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இவரது உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கம்பம் ஜனகர் ஜோதிநாதன், போடி பாலமுருகன் ஆகியோர் நகராட்சி சுகாதாரப்பிரிவு பணியாளர்களுடன் கம்பம் வாரச்சந்தை, மற்றும் பஜார் பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் சில கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட போதை மற்றும் நச்சுப்பொருள் கலந்த போதைப்பாக்கு மற்றும் புகையிலை சுமார் 25 கிலோவை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடைக்காரர்களிடம், மறுபடியும் ஆய்வு செய்ய வரும்போது மீண்டும் இது போன்ற அனுமதி இல்லாத தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தீவைத்து கொளுத்தினர்.


No comments:

Post a Comment