Jan 13, 2015

ஓமலூர் பகுதிகளில் கலப்பட வெல்லம் தயாரித்த 4 ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை




ஓமலூர், ஜன.13-
ஓமலூர் பகுதிகளில் சர்க்கரை, ரசாயனம் கலந்து கலப்பட வெல்லம் தயாரித்த 4 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கலப்பட வெல்லம்
சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், தொட்டியபுரம், சர்க்கரை செட்டிப்பட்டி, தும்பிபாடி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள பெரும்பாலான ஆலைகளில் அதிக லாபம் பார்க்கும் ஆசையுடன் வெல்ல உற்பத்தியாளர்கள், வெளிர் நிறத்தை பெறுவதற்காக மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்களையும், அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் குறைவான விலைக்கு வாங்கி வரப்பட்ட சர்க்கரைகளையும் சேர்த்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் ஆய்வு
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேலு, மாரியப்பன், இளங்கோவன் ஆகியோர் நேற்று தொட்டியபுரம் ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர் ராஜா என்பருக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது வெல்லத்தில் சர்க்கரை கலந்து வெல்லம் தயாரித்து வந்தது தெரியவந்தது. மேலும், அங்கு ஒரு அறையில் மறைத்து வைத்திருந்த 32 சர்க்கரை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
சீல் வைத்து நடவடிக்கை
இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பிறகு போலீஸ் பாதுகாப்புடன் ராஜாவின் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கும் 16 மூட்டை சர்க்கரை இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அந்த ஆலைக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதேபோல் அப்பகுதியில் ராஜாமணி, செல்வம், செல்வக்குமார், பெரியசாமி ஆகியோரின் ஆலைகளிலும் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, வெல்ல மாதிரியை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். காமலாபுரம் பெரியகவுண்டர் காட்டுவலவு பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் ஆலையில் சோதனை நடத்தியபோது அங்கு 3 மூட்டை சூப்பர் பாஸ்பேட் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆலைக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் காமலாபுரம் சேசியன் காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஆலையில் ரசாயனம் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தி கலப்பட வெல்லம் தயாரித்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்மூலம், கலப்பட வெல்லம் தயாரித்ததாக மொத்தம் 4 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
50 ஆலைகளில்....
ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒரேநாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் அதிகாரிகள் காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: