ஓமலூர், ஜன.13:
ஓமலூரில் சர்க்கரை மற்றும் ரசாயனம் கலந்து வெல்லம் தயாரித்த இரண்டு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அவர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சர்க்கரை மற்றும் ரசாயனம் கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கட்டுப்பாட்டு துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேற்று காலை ஓம லூரை அடுத்த தும்பிபாடி, காமலாபுரம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தும்பிபாடி ராஜா என்பவரது ஆலையில் சர்க்கரை மற்றும் ரசாயனம் கலந்து வெல்லம் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 32 மூட்டை சர்க்கரையை பறிமுதல் செய்து, ஆலைக்கு சீல் வைத்தனர்.
இதை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது ஆலையையும் அதிகாரிகள் சோதனை செய் தனர். அவரிடம் இருந்தும் 16 மூட்டை சர்க்கரை மற்றும் ரசாயனங்களை பறிமுதல் செய்து, அவரது வெல்ல ஆலைக்கும் சீல் வைத்தனர். இதுபோன்று இப்பகுதிகளில் உணவில் கலப்படம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ராஜாவின் ஆலையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆலையில் வேலை செய்பவர்கள் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதை தொடர்ந்து, அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் சப்இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் அதிகாரிகளை மிரட்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment