சேலம், ஜன.30:
சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 லட்சம் மதிப்புள்ள 4521 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடைவிதித்தது. இந்த உத்தரவுக்கு பிறகும் பீடா, பெட்டி, டீக்கடைகளில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக கடைகளில் சோதனை செய்யும்படி தமிழக அரசு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் பீடா, பெட்டி, டீக்கடைகளில் சோதனையிட்டு, புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் அலுவலர்கள் சேலம் மாநகரம், ஆத்தூர், தம்மம்பட்டி, தலைவாசல், மேட்டூர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, இடைப்பாடி, மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில் கடந்தாண்டு ஆயிரத்திற்கும் கிலோவுக்கும் மேற்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் ஒரு சில கடைகளில் மறைமுகமாக விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், மாவட்டம் முழுவதும் கடந்தாண்டு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் 1297 கடைகள் மற்றும் வாகனங்களில் சோதனையிட்டதில் 4521 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15 லட்சத்து 4 ஆயிரத்து 50 ஆகும். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தீயிட்டு அழிக்கப்பட்டது. பாரன்பராக், குட்கா உள்ளிட்ட புகைப்பொருட்களில் நிகோடின் என்ற பொருள் கலக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உபயோகிக்கும் போது வாயில் புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும். எனவே இதுபோன்ற புகைப்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
கடந்தாண்டு பான்பராக், குட்கா விற்பனை செய்த 2400க்கு பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் இனி கடைகளில் பான்பராக், குட்கா விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment